ரஃபேல் விமான பேர விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐயிடம் விரிவான புகாரை அளித்திருக்கிறார்கள் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி உள்ளிட்டோர்.
பிரான்ஸுடனான ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஒரு லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் நேருக்கு நேர் கேள்விகள் எழுப்பினார். அதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில பதில்களை வழங்கியபோதும் ராகுல் தொடர்ந்து இந்த விவகாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.
இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி (இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்) ஆகியோர் நேற்று (அக்டோபர் 4) டெல்லியில் இருக்கும் சிபிஐ தலைமை அலுவலகத்துக்குச் சென்றனர்.
ரஃபேல் விமானம் வாங்குவதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் பற்றிய விரிவான ஆவணங்கள் அடங்கிய மனுவை சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவிடம் அளித்த அவர்கள், ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி ரஃபேல் விவகாரம் பற்றி சிபிஐ விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர். இவர்களோடு முன்னாள் மத்திய அமைச்சரும் மோடி அரசு மீது தொடர்ந்து புகார்களைத் தெரிவிக்கும் யஷ்வந்த் சின்ஹாவும் இந்த புகார்தாரர்களில் ஒருவராக இருக்கிறார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி ஆகியோர் கூட்டாக விடுத்திருந்த அறிக்கையில், “ரஃபேல் ஒப்பந்தம் என்பது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது. இந்த ஒப்பந்தத்தில் அதிகார துஷ்பிரயோகமும், மிகப்பெரிய ஊழலும், குற்றச்செயல்களும் நடைபெற்றிருக்கின்றன” என்று தெரிவித்தனர்.
இதன் பின்னர் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி, ‘ரஃபேல் பேர விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணை வேண்டும். இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய பாதுகாப்புத் துறை ஊழல் என்றால் அது ரஃபேல்தான்” என்றார் பூஷண்.
இந்தப் பின்னணியில் நேற்று சிபிஐ இயக்குநரைச் சந்தித்து ரஃபேல் பற்றி விசாரிக்குமாறு புகார் அளித்திருக்கிறார்கள். புகார் அளித்த பின் சிபிஐ தலைமை அலுவலக வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் பூஷண், “சட்டத்துக்குட்பட்டு ரஃபேல் பற்றி விரிவாக விசாரிக்கும் படி சிபிஐ இயக்குநரிடம் பல ஆவணங்களை முன்வைத்து மனு கொடுத்திருக்கிறோம். சிபிஐ இயக்குநர் எங்களிடம், இதை முழுமையாக படித்துப் பார்த்துவிட்டு நடவடிக்கைகள் எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்” என்றார்.
இதுவரை காங்கிரஸ் தரப்பில் இருந்தே ரஃபேல் தாக்குதல்கள் வந்துகொண்டிருந்த நிலையில், பாஜகவின் அறிவுஜீவிகளான அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோரே ரஃபேல் பற்றிய விரிவான புகார்களோடு சிபிஐ அலுவலகத்துக்குள் நுழைந்திருப்பது இந்த விஷயத்தில் மத்திய அரசுக்குக் கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினமே காங்கிரஸ் சார்பில் மத்திய கணக்குத் தணிக்கைத் துறை அதிகாரி ராஜீவ் மகரிஷியிடம் ரஃபேல் பற்றி நேற்று மீண்டும் ஒரு புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் சிபிஐ, சிஏஜி ஆகிய இரு முக்கியமான அலுவலகங்களில் மத்திய அரசுக்கு எதிராக ரஃபேல் பேரம் பற்றிய புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான குழுவினர் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவைச் சந்தித்து புகார் அளித்தனர். அதன் மீது இன்றுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது நினைவூட்டப்பட வேண்டிய தகவல்.
�,”