உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்கார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 30ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற *24ஆவது மொபிகேம்* மாநாட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “வயர்லெஸ் பிராட்பேண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்தியா வெறும் 24 மாதங்களில் 155ஆவது இடத்திலிருந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன்பிறகு இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றம் வேறொன்றும் நெருங்க முடியாத அளவுக்கும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கும் இருந்து வருகிறது.
இந்தியாவுக்கான எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று உலகிலுள்ள வெகுசிலரே எண்ணினர். இன்று நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 லட்சம் கோடி டாலரை நெருங்கி வருகிறது. உலகின் மூன்றாவது பணக்கார நாடாக இந்தியா உருமாறவுள்ளது. அடுத்த இருபது ஆண்டுகளில் உலகிற்கு இந்தியா தலைமை வகித்து, உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் அடுத்த அலைக்குப் பங்களிக்கும் என்று உறுதியாகக் கூறுகிறேன். நான்காம் தொழில் புரட்சியில் பங்கேற்பது மட்டுமல்லாமல் அதற்கு இந்தியா தலைமை வகிக்கும் என நான் முழுமையாக நம்புகிறேன்.
இந்தியாவின் தொழில்நுட்ப அறிவு கொண்ட இளைஞர்களே நமது பெரிய பலம். 100 கோடிக்கும் மேலான திறமைசாலிகளின் ஒட்டுமொத்த சக்தியும் ஒன்றிணைந்தால் இந்தியாவால் எதையெல்லாம் உருவாக்க முடியும் என எண்ணிப் பாருங்கள். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் இன்று இந்தியா உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய நாடாக உள்ளது. இதற்கு முன்பு இந்தியாவில் தொழில் முனைவுப் போக்கு வரலாற்றிலேயே இதுபோல இருந்ததில்லை” என்று பேசியுள்ளார்.�,