தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த எம்.எல்.ஏ. கள்ளக்குறிச்சி பிரபு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று (ஜூலை 20) சந்தித்துப் பேசினார்.
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகளில் அமமுக படுதோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, அக்கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறி மாற்றுக் கட்சிகளில் இணைந்துவருகிறார்கள். அந்த வகையில் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துவந்த சட்டமன்ற உறுப்பினர்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் கடந்த வாரத்தில் முதல்வரை சந்தித்த பிறகு, அதிமுகவில் தொடரப்போவதாக தெரிவித்தனர்.
இந்த சூழலில் தினகரனுக்கு ஆதரவாக இருந்த ஒரே எம்.எல்.ஏ.வான கள்ளக்குறிச்சி பிரபுவும் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியுள்ளார். சட்டமன்ற கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று (ஜூலை 20) முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அறையில் பூங்கொத்துடன் சந்தித்த பிரபு, மீண்டும் அதிமுகவில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். அப்போது துணை முதல்வர் பன்னீர்செல்வம், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ப.மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியபோது அதனை எதிர்த்து ரத்தினசபாபதி, கலைச்செல்வன் மட்டுமே வழக்கு தொடர பிரபு அமைதியாகவே இருந்துவந்தார். அவர் அதிமுகவுக்கு திரும்பவுள்ளதாகவும் அப்போது பேசப்பட்டது. பின்னர், சில நாட்களில் அவரும் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் தற்போது முதல்வரை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார் பிரபு.
இந்த சந்திப்புக்கான முழு ஏற்பாட்டையும் செய்தவர் முன்னாள் அமைச்சர் ப.மோகன்தான் என்கிறார்கள் அதிமுகவினர். இதுதொடர்பாக ஐந்து நாட்களுக்கு முன்பு முதல்வரிடம் பேசிய மோகன், பிரபு மீண்டும் அதிமுகவுக்கு வர விருப்பப்படுகிறார் என்ற தகவலை சொல்லியிருக்கிறார். அதற்கு முதல்வரோ, ‘இப்போது வர வேண்டாம். சட்டமன்ற கூட்டம் முடியும் நாளன்று அழைத்து வாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.
அதன்படி இன்று இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்போது முதல்வரிடம் பேசிய பிரபு, “உங்களிடம் எனக்கு எந்த தனிப்பட்ட பகையுமில்லை. எம்.எல்.ஏ குமரகுருதான் எனக்கு அதிகமாக தொந்தரவு கொடுத்துவந்தார். அதனால்தான் தினகரனிடம் சென்றேன். என்னை தொந்தரவு செய்யக் கூடாது என்று குமரகுருவை நீங்கள் அழைத்து கண்டிக்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார். அதற்கு முதல்வரும் ஒகே சொல்லியிருக்கிறாராம்.
**
மேலும் படிக்க
**
**[ தமிழ் பேசினால் தமிழ்ப் படமா?](https://minnambalam.com/k/2019/07/20/20)**
**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**
**[ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்](https://minnambalam.com/k/2019/07/20/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”