சேலத்தில் அரசுக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த விவகாரத்தில் தினகரன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் டெங்கு குறித்து நோட்டீஸ் விநியோகித்ததாக தினகரன் மீது ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் சேலம் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக துண்டறிக்கை விநியோகித்ததற்காக தினகரன் அணியைச் சேர்ந்த 17 பேர் மீது சேலம் அன்னதானப்பட்டி காவல்துறையினர் 7பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.அவர்களில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், எஸ்.கே.செல்வம், உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். கைதானவர்களில் ஐந்து பேர் கடந்த 3 ஆம் தேதி சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு லிங்கம் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
துண்டறிக்கையில் தினகரன், புகழேந்தி உள்ளிட்டோர் படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அவர்கள் மீது தேசத்துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதையெதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தாக்கல் செய்த வழக்கில், காவல்துறையினர் பதில் அளிக்கும் வரை, புகழேந்தி, தினகரன் உள்ளிட்டோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது”என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், அதிமுக அம்மா அணி சார்பாக நேற்றைய தினம் (அக்டோபர் 16) திருச்சி ஸ்ரீரங்கத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தினகரனும், அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்டு நிலவேம்புக் குடிநீரையும், உதவிகளையும் வழங்கினர். நிகழ்வு முடிந்தவுடன் ராகவேந்திரா தெரு பகுதியில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இந்த நிலையில் அனுமதியின்றி ஊர்வலம் சென்று துண்டு பிரசுரம் வழங்கியதாக, அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன், அவரது அணியைச் சேர்ந்த திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மனோகரன், கனகராஜ் உள்ளிட்டோர் மீது ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது அனுமதியில்லாமல் துண்டறிக்கை வழங்கியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டது, உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.�,”