மங்காத்தா 2 திரைப்படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பேசியுள்ளார்.
அஜித் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பு பெற்றது. காவல் துறை அதிகாரியாக அஜித் நடிக்க த்ரிஷா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஹிட் அடித்தன. அந்தப் படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவுக்கு அது முக்கியமான படமாக அமைந்தது. அதன்பின் அவர் இயக்கிய படங்கள் மங்காத்தா அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை.
அஜித் – வெங்கட் பிரபு ஹிட் கூட்டணியாகப் பார்க்கப்பட்டு வருகிறது. எனவே மீண்டும் அஜித்துடன் இணைந்து பணியாற்றுவீர்களா, மங்காத்தா 2 எப்போது போன்ற கேள்விகளை வெங்கட் பிரபு தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இது தொடர்பாக கேட்கப்பட்டபோது, “மங்காத்தா 2 படத்துக்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. அந்தப் படத்தை எடுக்கலாமா, வேண்டாமா என்ற பயமும் இருக்கிறது. ஆனால், கண்டிப்பாக அஜித்துடன் ஒரு திரைப்படம் பண்ண ஆவலுடன் இருக்கிறேன். அது மங்காத்தா 2-வா என்பது தெரியவில்லை. ஆனால், விரைவில் அது நடக்கும்” என்று கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு பேசிய இந்த [வீடியோவை](https://twitter.com/AjithJawahar/status/1097047857654185984) அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் பிங்க் ரீமேக் படத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து மீண்டும் அவர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
வெங்கட் பிரபு, பார்ட்டி படத்தின் வெளியீட்டுப் பணியில் கவனம் செலுத்தி வருகிறார். அதைத் தொடர்ந்து சிம்புவைக் கதாநாயகனாகக் கொண்டு மாநாடு படத்தை இயக்கவுள்ளார்.�,