மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக விதிகளை வகுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்குத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த குழு தனது ஆய்வைத் தொடங்கவுள்ள நிலையில், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் நசிமுதீன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாக, ஷம்பு கல்லோலி என்பவர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.
இதை எதிர்த்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “ஸ்டெர்ட்லைட் ஆலை விவகாரத்தில் நசிமுதீனுக்கு இருக்கும் புரிதலும் அனுபவமும் புதிய அதிகாரி ஷம்பு கல்லோலிகருக்கு இருக்க வாய்ப்பில்லை. நசிமுதீன் பணியிட மாறுதல் பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவது போல் உள்ளது” என்று கூறியிருந்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் சம்பந்தமான விசாரணையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பழைய அதிகாரி நசிமுதீனும், புதிய அதிகாரியாகப் பொறுப்பேற்கவுள்ள ஷம்பு கல்லோலிக்கரும் இணைந்து ஒத்துழைக்க முடியுமா என தமிழக அரசிடம் கேட்டுத் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (செப்டம்பர் 3) நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் அமர்வு முன்பு வந்தது. அப்போது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவரை நியமிப்பதில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் தமிழக அரசு 90 நாட்களுக்குள் வழிமுறைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். “ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அமைத்துள்ள குழுவானது, தேவைப்பட்டால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நசிமுதீனின் கருத்துக்களைக் கேட்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.
�,