நாட்டில் கும்பல்களால் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு வேலை வாய்ப்பின்மையே காரணம் என்று தெரிவித்த ராகுல் காந்தி, “21ஆம் நூற்றாண்டில் மக்களை ஒதுக்கி வைப்பது என்பது மிகவும் ஆபத்தானது” என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நேற்று (ஆகஸ்ட் 22) இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர், “பாஜக அரசு செயல்படுத்திய மூன்று திட்டங்கள் இந்திய மக்களிடையே கோபத்தை உருவாக்கியுள்ளது. அந்த மூன்றும், சிறுபான்மையினர் மற்றும் தலித்கள் கும்பல்களால் தாக்கப்படுவது, பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவைதான்.
21ஆம் நூற்றாண்டில் மக்களை ஒதுக்கி வைப்பது என்பது மிகவும் ஆபத்தானது. அவர்களுக்கு தெளிவான தொலைநோக்கு பார்வையை நாம் அளிக்கவில்லை என்றால், வேறுயாராவது வழங்குவார்கள். வளர்ச்சி செயல்முறைகளில் இருந்து அதிக அளவிலான மக்களை ஒதுக்குவது ஆபத்தானது. இந்தியாவில் மத்திய அரசு, சிறுபான்மையினர், தலித் மக்கள், பழங்குடியினரை அரவணைத்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தவறிவிட்டது. சமுதாயத்தில் ஒரு தரப்பினருக்கு கிடைக்கும் வசதிகளையும், வாய்ப்புகளையும் மற்றொரு தரப்புக்கு தர பாஜக அரசு மறுக்கிறது.
பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பாதிப்பை அரசு ஏற்படுத்திவிட்டது. சிறு தொழிலில் ஈடுபட்டவர்கள் வேலைவாய்ப்பை இழந்து தங்களது கிராமங்களுக்கே செல்லும் நிலை ஏற்பட்டது.
அமெரிக்கா 2003இல் ஈராக் மீது தாக்குதல் நடத்திய பின்னர், ஈராக்கில் ஒரு குறிப்பிட்ட பழங்குடியினரை அரசாங்கம் மற்றும் ராணுவத்தில் வேலைகள் பெறுவதில் இருந்து விலக்கி வைக்கும் சட்டத்தை அவர்கள் கொண்டுவந்தனர். அது அந்த நேரத்தில் மிகவும் தீங்கான முடிவைப் போல் தோன்றியது.
அது ஏராளமான மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட வழிவகுத்தது. அத்துடன் அது நின்றுவிடவில்லை. அந்தக் கிளர்ச்சி மெதுவாக ஈராக் மற்றும் சிரியாவில் நுழைந்தது. பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். என்னும் கொடூரக் கருத்தோடு இணைந்தது.
என் பாட்டியையும் தந்தையையும் வன்முறையில் இழந்தவன் நான். எனவே வன்முறையினால் தனிப்பட்ட முறையில் நான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன். இதில் இருந்து மீண்டு வர எனக்குக் கிடைத்த ஒரே வழி தவறு செய்தவர்களை மன்னிப்பதுதான். எனது தந்தையின் மரணத்துக்குக் காரணமாக இருந்தவர் (விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன்) இலங்கை மண்ணில் சடலமாக இருப்பதைப் பார்த்ததும் எனது சகோதரி பிரியங்கா காந்தியைத் தொடர்புகொண்டு பேசினேன். அவரது மரணம் மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்று கூறினேன், என் சகோதரியும் அதையே கூறினார். நான் மகிழ்ச்சி அடையாததற்குக் காரணம் அவரது குழந்தைகளில் நான் என்னை பார்த்தேன்.
இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை என்பது பெரிதாக உள்ளது. இந்தியாவில் பெண்களைப் பார்க்கும் அணுகுமுறையை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். ஆண்கள் பெண்களைச் சமமாகவும் மரியாதையாகவும் பார்க்கத் தொடங்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் நான் பிரதமரைக் கட்டித் தழுவியது காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அவர்களின் எண்ணத்தை நான் ஆதரிக்கவில்லை” என்று ராகுல் பேசினார்.�,