முதுநிலை பொறியியல் படிப்புகளில் 77 சதவிகித காலியிடங்கள் உள்ளன என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முதுநிலை பொறியியல் படிப்பில் சேருவதற்கு தமிழக அரசின் டான்செட் பொது நுழைவுத் தேர்வு அல்லது நடுவண் அரசின் கேட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த வெள்ளிக்கிழமையோடு (ஆகஸ்ட் 31) முடிவுற்றது.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட நான்கு வளாகக் கல்லூரிகள், ஐந்து உறுப்புக் கல்லூரிகள், ஆறு அரசுக் கல்லூரிகள், ஒரு நடுவண் அரசுக் கல்லூரி உட்பட மொத்தம் 332 கல்லூரிகளில் 16,728 முதுநிலை பொறியியல் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதற்கு 6,736 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 3,891 பேர் மட்டுமே முதுநிலைப் படிப்புகளைத் தேர்வு செய்தனர். இதனால் 12,837 இடங்கள் காலியாகவுள்ளன. அதாவது, 23 சதவிகித இடங்களே நிரம்பியுள்ளன; 77 சதவிகித இடங்கள் நிரம்பவில்லை.
அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியில் 93, கிண்டி பொறியியல் கல்லூரியில் 239, குரோம்பேட்டை எம்.ஐ.டி.கல்லூரியில் 189 மற்றும் திட்டமிடல் மற்றும் கட்டடவியல் கல்லூரியில் ஒரு காலியிடமும், அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் 522 இடங்களும் காலியாக உள்ளன. சிப்பெட் எனப்படும் நடுவண் நெகிழி தொழில்நுட்பக் கல்லூரியில் 11 இடங்கள் காலியாக உள்ளன. தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை, பல கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், கடந்த ஆண்டை விட இந்தாண்டில் 428 இடங்கள் கூடுதலாக நிரம்பியிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,