கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவிற்கு ரகுராம் ராஜனே காரணம் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொருளாதார வளர்ச்சியில் வேகக் குறைவு ஏற்பட்டதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜனே காரணம் என்று நிதி ஆயோக்கின் துணைத் தலைவரான ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 3ஆம் தேதியன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் குமார், பொருளாதாரப் பின்னடைவிற்கும், பணமதிப்பழிப்புக்கு தொடர்பில்லை என்றும், ரகுராம் ராஜனே பின்னடைவிற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், “பொருளாதாரப் பின்னடைவிற்கும், பணமதிப்பழிப்புக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை. இது ஒரு பொய் குற்றச்சாட்டு. ப.சிதம்பரம் மற்றும் நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இதை உருவாக்கி விட்டனர். இந்த அரசு ஆட்சிக்கு வந்தபோது வாராக் கடன்களின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடியாக இருந்தது. 2017ஆம் ஆண்டின் மத்தியில் ரூ.10.5 லட்சம் கோடியாக அது உயர்ந்தது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜனின் தலைமையில் வாராக் கடன்கள் அதிகரித்ததோடு பொருளாதார வளர்ச்சி பின்னடைவைச் சந்தித்தது” என்று கூறினார்.
ரகுராம் ராஜனோ தனது பதவிக்காலத்தில், வங்கித் துறையைப் பாதித்து வந்த வாரக் கடன் கணக்குகளைக் கண்டறிந்தார். முக்கியமாக, பொதுத் துறை வங்கிகளின் நிதியைப் பாதிக்கும் கணக்குகள் மீது கவனம் செலுத்தினார். இதன் விளைவாகக் கடன் வழங்கல் முறை ஒழுங்குபடுத்தப்பட்டது. ரகுராம் ராஜன் தனது பதவியிலிருந்து 2016 செப்டம்பர் 4, அன்று வெளியேறினார். பிரதமர் நரேந்திர மோடி 2016 நவம்பர் 8, அன்று பணமதிப்பழிப்பு அறிவிப்பை வெளியிட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.�,