ஜலந்தர் மாவட்டப் பேராயர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக, போப் ஆண்டவருக்குக் கடிதம் எழுதியுள்ளார் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான பிராங்கோ முலக்கல்.
கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்ட பேராயராக இருந்துவந்த பிராங்கோ முலக்கல் மீது கடந்த ஜூன் மாதம் பாலியல் புகார் தெரிவித்தார். அவர் கேரளாவில் இருந்தபோது, தன்னை 13 முறை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாகக் கூறினார். இந்த விவகாரத்தில் பேராயர் முலக்கல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு, கொச்சியில் கன்னியாஸ்திரிகள் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவரிடம் வரும் 19ஆம் தேதியன்று விசாரணை நடத்தப்படும் என்றும், இதுகுறித்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றும் கேரள காவல் துறை தெரிவித்தது.
இந்த நிலையில், வாடிகன் நகரிலுள்ள போப் பிரான்சிஸுக்குக் கடிதம் எழுதியுள்ளார் பேராயர் பிராங்கோ முலக்கல். செப்டம்பர் 16 தேதியிடப்பட்ட அந்த கடிதத்தில், ஜலந்தர் மறைமாவட்டப் பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாகத் தான் விலகுவதாகத் தெரிவித்துள்ளார். தன் மீதான வழக்கை எதிர்கொள்ளவும், இதற்காக கேரளாவில் நீண்ட பயணம் மேற்கொள்வதற்காகவும், தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜலந்தர் மாவட்ட கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த செய்தித்தொடர்பாளர் பீட்டர் கவும்புரம், இதனைச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். “பேராயர் பிராங்கோ முலக்கல்லைக் கைது செய்வதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லாததாகக் கேரள காவல் துறை தெரிவித்துள்ள நிலையில், தன் மீதான வழக்கை எதிர்கொள்ளும் முடிவை அவர் எடுத்துள்ளார். இதற்காக ஜலந்தர் மாவட்டப் பேராயர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக, அவரே போப்புக்குக் கடிதம் எழுதியுள்ளார். உண்மையை வெளிக்கொணர்வதற்காக அவர் மேற்கொள்ளும் இச்செயலை, வாடிகன் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் உள்ளார்” என்று கூறியுள்ளார்.
தனக்கு நெருக்கமான சட்ட நிபுணர்களுடன் விவாதித்த பிறகே, பிராங்கோ முலக்கல் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்காலிகமாகப் பேராயர் பதவியை வழங்குவது குறித்தோ, புதியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தோ, முலக்கல் போப்புக்கு எழுதிய கடிதத்தில் எந்தவிதக் குறிப்புகளும் இல்லையென்று கூறப்படுகிறது.
�,