ராஜன் குறை
பெரியார் முதலில் காங்கிரஸில்தான் சேர்ந்தார். காந்தியின் கள்ளுக்கடை மறியல், கதர் ஆடை பிரச்சாரம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டார். பின்னர் காங்கிரஸிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை வளர்த்தெடுத்தார். காங்கிரஸையும், காந்தியையும் கடுமையாக எதிர்த்தார். “காந்தி ஒழிய வேண்டும், காங்கிரஸ் ஒழிய வேண்டும்” என்றே பேசினார். அப்படிப்பட்டவர், காந்தி கொல்லப்பட்டவுடன் இந்தியாவுக்கு காந்தி தேசம் எனப் பெயரிட வேண்டும் என்றார். ஆனால், அதற்குப் பிறகும் இந்திய வரைபடத்தை எரிப்பது, ராமாயணத்தை எரிப்பது, இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தை எரிப்பது என்றெல்லாம் செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தார். காந்தியையும் விமர்சித்தார். மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் முன்னுக்குப் பின் முரணாகத்தான் தோன்றும். காந்தி தேசம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று பெரியார் சொன்னது, ஏதோ காந்தி இறந்த தருணத்தில் எழுந்த அனுதாப அலையில் சொன்னதாகத் தோன்றும்.
காந்தி, பெரியார் போன்ற வரலாற்று வியக்திகளை மேலோட்டமான சொற்களைக்கொண்டு புரிந்துகொள்ள முடியாது. ஆழமான தத்துவப் பயிற்சியும், சிந்தனையும் இருந்தால்தான் இவர்களது முரண்களையும், இவர்களைப் பிணைக்கும் சரடுகளையும் காண முடியும்.
முதலில் இரண்டு கேள்விகளை எழுப்புவோம். முதல் கேள்வி, பெரியார் ஏன் காந்தியை விமர்சித்தார்? இரண்டாவது கேள்வி, ஏன் அவர் கொல்லப்பட்டவுடன் காந்தி தேசம் என்று பெயரிட வேண்டும் என்று சொன்னார்?
காந்தி பார்ப்பனீயம் இந்தியாவின் சமூக மறுமலர்ச்சிக்கு எவ்வளவு தூரம் எதிரானது என்பதை போதுமான அளவு புரிந்துகொள்ளவில்லை; ஏற்கவில்லை. அதனால்தான் பெரியார் காந்தியைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால் காந்தியை அந்த பார்ப்பனீயமே கொன்றபோது, காந்தியின் வாழ்க்கைக்குப் புதியதொரு பொருள் உருவாவதைக் கண்டார். அதனால்தான் காந்தி தேசம் என்று பெயரிட வேண்டும் என்று சொன்னார். தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய சமூக மறுமலர்ச்சி நோக்குக்கு எதிராக நின்று விடாது என்று காந்தி நம்பிய பார்ப்பனீயம் கடைசியில் அவரை கொன்றேவிட்டது என்பதாலேயே அதை ஒரு முக்கிய செய்தியாக நினைத்தார் பெரியார். அந்த மரணம் வழங்கிய செய்தியை நினைவில் கொள்ளவே காந்தி தேசம் எனப் பெயரிட வேண்டும் என நினைத்தார்.
ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா போன்ற அமைப்புகள் இந்து மத அமைப்புகள்தானே, அது எப்படி பார்ப்பனீயம் என்று நினைப்பவர்கள் வரலாற்றை ஊன்றிப் படிக்க வேண்டும். பார்ப்பனீயம் என்ற சிமென்ட் இல்லாமல் இந்து மதம் என்ற கட்டடம் சாத்தியமேயில்லை. அந்த அடையாளத்தில் உருவாகக்கூடிய இந்திய தேசமும் சாத்தியமில்லை. காந்தியை ஏன் இந்துத்துவம் கொன்றது என்றால் அவர்கள் உருவாக்க விரும்பிய பார்ப்பனீய இந்து இந்தியாவுக்கு காந்தி மாற்றாக, மறுப்பாக விளங்கினார் என்பதுதான். காந்தி பார்ப்பனீயத்தின் ஆபத்தைப் புரிந்துகொள்ளவில்லையே தவிர, அவர் உருவாக்க விரும்பிய சமூக மறுமலர்ச்சியும் அதற்கான தேசமும் பார்ப்பனீய இந்து மத அடிப்படை கொண்டவை அல்ல. அவர் எல்லாவற்றிலிருந்தும் நல்ல விஷயங்களை எடுத்துத் தொகுத்து விடலாம் என்று நம்பினார். விஷத்தைப் பாலுடன் சேர்த்தால் பாலும் விஷமாகும் என்பதை உணரவில்லை. பார்ப்பனீயம் வர்ண அமைப்பினை தோற்றுவித்தது என்பதைவிட, அது என்றுமே ஆதிக்க நலன்களைப் பேணுவது, ஒட்டுமொத்த சமூகத்தின் ஆன்ம மறுமலர்ச்சிக்கு எதிரானது என்பதை காந்தி உணரவில்லை. தனிப்பட்ட பார்ப்பனர்களின் நற்குணங்களைக் கண்டு அதுவே பார்ப்பனீயத்தைச் சரிசெய்து விடும் என்று நினைத்துவிட்டார். அதன் விளைவை அவர் மட்டும் சந்திக்கவில்லை. அவர் உருவாக்கிய தேசமும் சந்திக்கிறது என்பதுதான் பிரச்சினை.
இந்த முக்கியமான பிரச்சினையில் அம்பேத்கரைப் போலவே பெரியாரும் காந்தியுடன் தீவிரமாக முரண்பட்டாலும், பெரியாருக்கும் காந்திக்கும் பல முக்கியமான தத்துவப் பார்வைகளில் பகிர்தலும் இருந்தன, ஒரு முக்கியமான முரணும் இருந்தது என்பதை ஆழமாகப் பரிசீலித்து அறிய முடியும். அவை என்ன என்று சுருக்கமாகப் பார்ப்போம்.
முதல் இணையுறவு, இருவருமே இறையாண்மை அல்லது அரசதிகாரம் என்பதைவிட சமூக உறவுகளிலேயே பிரச்சினைகளுக்குத் தீர்வு இருக்கிறது என்று நினைத்தார்கள். அதேநேரம் அந்த சமூக உறவுகள் மேம்பட, சமூக மறுமலர்ச்சி ஏற்பட சுயாட்சி என்பதும் அவசியம் என நினைத்தார்கள். ஆனால் அந்த சுயாட்சி அந்நியர்களுடன் ஆயுதமேந்தி போரிடுவதில் கிடைக்காது; சமூகம் வித்தியாசமாக வாழ விறுப்புறுதி கொள்வதன் மூலம்தான் சாத்தியமாகும் என்று நம்பினார்கள். எனவேதான் செல்வாக்கு மிக்கவர்களுடன் அரசியல் செய்தாலும், எப்போதும் எளிய மக்களை நோக்கியே பேசினார்கள். ஒவ்வொரு மனித ஆன்மாவின் சுய மரியாதையும் முக்கியம் என்று நினைத்தார்கள். குளோரியா ஸ்டீனம் என்ற அமெரிக்க பெண்ணியவாதி A Book of Self Esteem: Revolution From Within என்ற நூலில் காந்தி சுயமரியாதையை வலியுறுத்தியவர் என்று குறிப்பிடுகிறார் (அவருக்கு பெரியாரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை).
அவர்களுக்குள் இந்த முக்கியமான ஒற்றுமைகள் இருந்தாலும், ஒரு முக்கிய வேறுபாடும் இருந்தது. காந்தி சமூக முழுமையை, ஒத்திசைவை நம்பினார். எனவே எல்லோரும் எல்லோரையும் புரிந்துகொண்டு அனுசரித்துப் போனால் ஆதிக்கத்தின் கூர்முனைகளை மழுங்கச் செய்துவிடலாம் என்று நினைத்தார். ஆனால் பெரியாரோ, முரண்களின் மோதலையே நம்பினார். முழுமையான தீர்வுகள் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்த உக்கிரமான போராட்டமே சமூகத்தை மாற்றியமைக்கும் என எண்ணினார். இது கருத்தியல் அளவில் இருக்கலாம், ஒத்துழையாமையாக இருக்கலாம், வன்முறையின்றி இருக்கலாம். ஆனால், கண்டிக்க வேண்டியவற்றைத் தீவிரமாகக் கண்டித்து மறுப்பதே சமூக மறுமலர்ச்சிக்கு வழி என்று நினைத்தார்.
அவருடைய 150ஆவது பிறந்த தினத்தில் காந்தியை நினைவுகொள்ள எவ்வளவோ அம்சங்கள் உள்ளன. அதில், முக்கியமானது அவர் கொலையுண்டதன் காரணம். மரணத்தில் வாழ்கிறார் என்று சொல்வார்கள். அது காந்தி விஷயத்தில் நூற்றுக்கு நூறு பொருந்தும். அவரைக் கொன்ற சித்தாந்தமே இந்த தேசத்தின் எதிரி என்பதால்தான் இது பெரியாரின் காந்தி தேசம்.
�,”