டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று பிரதமரைச் சந்தித்து கஜா புயல் பாதிப்புகளை விளக்கி, நிவாரண நிதி கோரவுள்ளார்.
கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் இதுவரை கண்டிராத சேதத்தைச் சந்தித்துள்ளன. புயலுக்கு வீடு மற்றும் உடமைகளை இழந்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் புயல் பாதித்த தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட முதல்வர், மழையின் காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்குச் செல்லாமல் திரும்பினார். மேலும் 22ஆம் தேதி பிரதமரைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முகாமிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (நவம்பர் 21) மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்தார். சரியாக இன்று காலை 10 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்திக்கவுள்ளார்.
பிரதமரிடம் புயல் பாதிப்புகளை விளக்கி, சேத மதிப்பீட்டு அறிக்கையைக் கொடுக்கும் முதல்வர், தேவையான நிவாரண நிதியை உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தவுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக் குழுவையும் உடனடியாக அனுப்பி வைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறார். இச்சந்திப்பின்போது 13,000 கோடி அளவுக்குப் பிரதமரிடம் புயல் நிவாரண நிதியை முதல்வர் கேட்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. முதல்வருடன் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரும் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்.
முன்னதாக திருச்சியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசியிருந்த முதல்வர், மத்திய அரசு கேட்ட நிதியைவிட குறைத்துதான் தருகிறார்கள் என்று தெரிவித்திருந்தார். கஜா புயலால் ஐந்துக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்தச் சூழ்நிலையில், நிவாரண மற்றும் மீட்புப் பணிகளுக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்குமா என்ற எதிர்பார்ப்பும் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.�,