Aபள்ளி மாணவர்களுடன் கமல்

Published On:

| By Balaji

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள லிட்டில் ஃபிளவர் பள்ளி மாணவர்களுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று கலந்துரையாடினார்.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 129ஆவது பிறந்தநாள் இன்று (நவம்பர் 14), நாடு முழுவதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

“நமது முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம். சுதந்திரப் போராட்டம் மற்றும் பிரதமராக பதவி வகித்த போது அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் நினைவு கூர்வோம்” என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை நேற்று உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் உள்ள லிட்டில் ஃபிளவர் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் குழந்தைகள் தின நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

நேரு வேடம் அணிந்திருந்த மாணவர்களிடம் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்த கமல் பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், நான் இந்தப் பள்ளிக்கு 37 வருடங்களாகத் தொடர்புடையவன். ராஜபார்வை படம் எடுக்க இந்தப் பள்ளி உதவியாக இருந்தது. தன்னம்பிக்கை விடாமுயற்சி அனைத்தும் எனக்குப் பாடமாக இருந்தது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “புத்தகம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வைத்திருந்தார்கள் அது விரைவில் அவர்களுக்கு அளிக்கப்படும். புகழை , எனக்கு போதுமான அளவில் கொடுத்துவிட்டீர்கள். தகுதிக்கு அதிகமான புகழை தமிழகம் சேர்த்துள்ளது. இனி தமிழகத்திற்கு புகழ் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இவர்கள் என்னை விட நீண்ட ஆயுள் உடையவர்கள் அவர்கள் வாழ்த்தும்போது என் ஆயுளும் நீளும் “ என்று கூறியுள்ளார். குழந்தைகளுக்கு இருக்கும் நம்பிக்கை சாதாரண மனிதர்களுக்கு இருந்தால் இந்தியா பலமடங்கு முன்னேறிவிடும் என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி தொடங்கிய பின்னர், மக்களுடனான பயணத்தை மேற்கொண்டும் வரும் கமல், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அதிகளவு உரையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel