உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் பரோல் கேட்டு வழக்கு தொடர உள்ளதாக அவருடைய வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன் கடந்த 2016ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது, அவர் சக நீதிபதிகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துவந்தார். பின்னர், அவர் உச்ச நீதிமன்றத்தால் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு பணி இடமாற்றம் செயப்பட்டார். அப்போது, அவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து, பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு புகார் கடிதம் அனுப்பினார். நீதிபதி கர்ணன் ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவதாகவும் அவருடைய இந்த செயல் நீதித்துறையை அவமதிப்பதாக உள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது வழக்கு தொடர்ந்து விசாரித்தது.
இந்த வழக்கில் நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக உத்தரவிடுவதும், நீதிபதி கர்ணனுக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிடுவதும் என்று தொடர்ந்தது. இதனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கர்ணன் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து அவரைக் கைது செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து, சென்னையில் இருந்த நீதிபதி கர்ணன் கடந்த மே 8ம் தேதி தலைமறைவானார். அவர் தனது தலைமறைவு காலத்திலேயே பணி ஓய்வும் பெற்றார்.
நீதிபதி கர்ணனை ஒரு மாத காலமாக தேடி வந்த மேற்கு வங்க போலீஸார் அவரை கடந்த ஜூன் 20ம் தேதி கோவையில் கைது செய்து கொல்கத்தா அழைத்துச் சென்று சிறையிலடைத்தனர். நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றம் தனக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் கோரியும் பலமுறை மனு தாக்கல் செய்தும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில், நீதிபதி கர்ணன் தன்னை பரோலில் அல்லது ஜாமீனில் வெளியே விட வேண்டும் என்று மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதிக்கு மனு அளித்தார். அரசியல் சாசன சட்டம் 161வது பிரிவின்படி இதில் ஆளுநருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் ஜாமீனில் அல்லது பரோலில் விட வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால், ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அவர் இந்த மனுவை மாநில அரசின் முடிவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதில் மேற்குவங்க அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து, நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா இன்று (ஆகஸ்ட் 20) நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆளுநருக்கு நாங்கள் அனுப்பிய மனு மீது மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று நாங்கள் மேற்குவங்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.�,”