aபயங்கரவாதிகளுடன் சண்டை: 4 பேர் மரணம்!

Published On:

| By Balaji

காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ உயரதிகாரி உள்பட 4 பேர் வீர மரணம் அடைந்தனர்.

கடந்த 14ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் பலியாகினர். பிப்ரவரி 15ஆம் தேதியன்று, ரஜோரி பகுதியில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் மேஜர் பதவி வகித்துவந்த ராணுவ உயரதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட பிங்க்லன் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலர் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதி முழுவதையும் ராணுவத்தினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். பின்னர், பயங்கரவாதிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று (பிப்ரவரி 18) அதிகாலை வரை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், ராணுவ மேஜர் உள்பட 4 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர். ஒரு வீரர் காயமடைந்தார். இந்த துப்பாக்கிச் சண்டையில் மேஜர் டி.எஸ்.டான்டில் உயிரிழந்தார். ராம், அஜய் குமார், ஹரி சிங் ஆகிய போலீசாரும் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர் என்று தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து பயங்கரவாதிகள் தொடர்பான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சண்டையில் காஸி ரஷீத், கம்ரான் என்ற முக்கிய பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

**தனி விமானத்துக்கு ஒப்புதல்**

ஜம்மு-காஷ்மீரில் பணியில் அமர்த்தப்படும் பாதுகாப்புப் படையினரை விமானத்தின் மூலம் அழைத்துச் செல்லும் திட்டத்திற்கு மத்திய உள் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காகவே, ஸ்ரீநகர்-டெல்லி-ஸ்ரீநகர், ஸ்ரீநகர்-ஜம்மு-ஸ்ரீநகர் தடங்களில் வாரத்திற்கு 6 நாட்கள் வணிக அடிப்படையிலான விமானம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share