உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை நேரில் சென்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆறுதல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறை பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நெல்.ஜெயராமன். நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்தவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது மருத்துவ செலவிற்கு போதிய பணம் இல்லாததால், அவரது குடும்பத்தினர் அவதிப்பட்டு வந்துள்ளனர். எனவே அவரது சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்து, நேரில் சென்று நலம் விசாரித்த நடிகர் சிவக்கார்த்திகேயன், நெல்.ஜெயராமனின் மருத்துவ செலவு முழுவதையும் ஏற்றுள்ளார்.
தொடர்ந்து, அமைச்சர்கள் அதிகாரிகள், திரையுலகினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் அவரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்பு, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பாலகிருஷ்ண ரெட்டி, துரைக்கண்ணு ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நெல் ஜெயராமனுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று கூறினார். அதுபோன்று டிஜிபி ராஜேந்திரனும் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதற்கிடையே, அவரது மருத்துவ செலவிற்காக தமிழக அரசு, ரூ.5 லட்சம் அறிவித்தது.
இந்நிலையில் நேற்று (நவம்பர் 16) மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மருத்துவமனைக்குச் சென்று நெல் ஜெயராமனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ, “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்கள் வேளாண்மை செய்துவந்த 174 வகை பாரம்பரிய நெற்பயிரை அழிவிலிருந்து மீட்பதற்காகத் தன்னை அர்ப்பணித்துப் போராடி வெற்றி கண்டதற்காக பாராட்டு தெரிவித்தார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின், காவிரி விவசாயிகளைப் பாதுகாக்கவும், தமிழகத்தின் அனைத்துப் பகுதி விவசாயிகளின் நலனைக் காக்கவும் அறப்போராட்டங்களில் பங்கேற்ற போராளிதான் நெல் ஜெயராமன்” என்று சுட்டிக்காட்டினார்.
“தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ‘நெல்’ ஜெயராமனை நான் சந்தித்துப் பேசியபோது, மனிதாபிமானத்தோடு அவருக்குச் சிகிச்சை அளித்து வருகிற மருத்துவர்களை எல்லாம் குறிப்பிட்டு நன்றி கூறினார்” என்று தெரிவித்த வைகோ அவர் முழுமையாக நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்றார்.
�,”