தமிழகத்தில் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
17ஆவது மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதாலும், வாக்குப்பதிவு, வாக்குப்பெட்டிகளை வைப்பதற்குப் பள்ளிகளைப் பயன்படுத்த வேண்டியிருப்பதாலும், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை விரைவில் முடிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தற்போது, பனிரெண்டாம்,பத்தாம்,பதினோராம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் ஆரம்பத்திலேயே மற்ற வகுப்புகளுக்குத் தேர்வுகளை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று(மார்ச் 14) பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரம் முடிவடையும். தற்போது மூன்றாம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கான தேர்வு கால அட்டவணைகளை மாற்றி, முதன்மை பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்டங்களின் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். வேலையிழப்பு நாட்களைச் சரிசெய்யச் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறலாம். இதன்படி 2018-2019ஆம் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ஏப்ரல் 12 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.�,