இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையற்ற முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய ஆசிரியை சபரிமாலா ஜெயகாந்தன் தலைமையில் கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சேலம் சிறுமி ராஜலட்சுமி, தேனி சிறுமி ராகவி எனப் பெண் குழந்தைகள் வன்கொடுமைக்கும், கொலைக்கும் உள்ளாவதைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசி 128 நாட்களுக்குப் பின், பிப்ரவரி 28ஆம் தேதி மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, நுங்கம்பாக்கம் காவல் துறையினர் இந்தியத் தண்டனை சட்டம் 153பி பிரிவின் கீழ் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
குறிப்பிட்ட மதம், சாதி, மொழி குறித்துப் பேசி மக்களிடையே கலவரத்தைத் தூண்டினால்தான் 153பி பிரிவில் வழக்கு பதிவு செய்யமுடியும் என்கிறபோது, தன் மீது பதிவான வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி திருமுருகன் காந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று (மார்ச் 9) விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், திருமுருகன் காந்திக்கு நிபந்தனையற்ற முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.�,