கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திடம் தகவல்களை விற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் பேஸ்புக் நிறுவனத்திற்கு 500 கோடி டாலர் அபராதம் விதிக்க அமெரிக்க வர்த்தக ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம் தனது 8.7 கோடி பயனாளிகளின் தனிநபர் விவரங்களை இங்கிலாந்தை சேர்ந்த கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் பகிர்ந்துகொண்டதாக கடந்த ஆண்டில் புகார்கள் எழுந்தன. இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசு ஒரு ஆண்டு காலமாக விரிவாக விசாரணை மேற்கொண்டு வந்தது. பேஸ்புக் நிறுவனத்திற்கும், அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையத்திற்கும் இடையே 2011ஆம் ஆண்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் ஏதும் விதிமீறல்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.
பேஸ்புக்கிற்கு அபராதம் விதிக்க ரிபப்ளிக்கன் கட்சியும் ஆதரவளித்துள்ளது. இந்நிலையில், தகவல் விற்பனை விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு 500 கோடி டாலர் அபராதம் விதிக்க அமெரிக்க வர்த்தக ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உத்தரவுக்கு இன்னும் அமெரிக்க நீதித்துறையின் சிவில் பிரிவின் ஒப்புதல் கிடைக்க வேண்டும். ஒப்புதல் கிடைத்தபின், அமெரிக்க வரலாற்றில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை இதுவாகவே இருக்கும்.
இதற்கு முன் அதிகபட்சமாக கூகுள் நிறுவனத்திற்கு 22.5 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த அபராதத்தொகை பேஸ்புக்கிற்கு ஒரு பெரிய தண்டனையல்ல என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ரோட்ஸ் ஐலேண்டின் பிரதிநிதியான டேவிட் சிசிலின் இதுபற்றி பேசுகையில், “பேஸ்புக்கின் வருவாயில் இந்த அபராதத்தொகை மிகவும் சொற்பமே. இந்த அபராதம் விதிக்கப்படுவதால் பேஸ்புக் நிறுவனம் பொறுப்புணர்ச்சியோடு மக்களின் தகவல்களை பாதுகாக்கப்போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.�,