aடிவி வழி இலவச பயிற்சி : சைதை துரைசாமி

Published On:

| By Balaji

கிராமப்புற, பொருளாதாரத்தில் பின் தங்கி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், இந்திய அளவில் முதல் முறையாக, ‘டிவி’ வழியே, இலவச பயிற்சி திட்டத்தைச் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிமுகப்படுத்தவுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், முன்னாள், சட்டமன்ற உறுப்பினருமான சைதை துரைசாமி , மத்திய மாநில அரசு பணிகளுக்காக நடக்கும் போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்காக இலவசப் பயிற்சி அளிக்கும் வகையில் மனித நேய மையத்தைச் செயல்படுத்தி வருகிறார்.

கடந்த 13 ஆண்டுகளாக, மனிதநேய இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வரும் நிலையில், இதுவரை, யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., சிவில் நீதிபதிகள் தேர்வுகளில், 3,226 பேரும், வங்கி தேர்வு, ரயில்வே, காவல் துறை பணி, குரூப் – 4 தேர்வு உள்ளிட்ட, பல்வேறு பணிகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மனித நேய மையம் மூலம் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் பணியாற்றுகிறார்கள்.

இவ்வாறு பல மாணவர்களின் கனவுகளை நனவாக்கிய சைதை துரைசாமியின், மனித நேய மையத்தில் படித்து தாங்களும் வெற்றி காண்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள் சென்னைக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களால் சென்னைக்கு வந்து தங்கி படிக்கும் அளவுக்குப் பொருளாதார வசதிகள் இருப்பதில்லை. எனவே அவ்வாறான மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மனித நேய மையம் தலைவர் சைதை துரைசாமி புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இந்திய அளவில் முதன் முறையாக மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே, போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளும் வகையில் ‘டிவி’ வழியே, இலவச பயிற்சி திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கிராமப்புற மாணவர்கள், சென்னை வந்து தங்கி பயிற்சி பெற, குறைந்தபட்சம், 2.50 லட்சம் ரூபாய் செலவாகிறது. அப்படி செலவு செய்தாலும், அனைவராலும் முதல் முயற்சியில் வெற்றி பெற முடிவதில்லை. முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவோர் எண்ணிக்கை, 10 பேரை கூட தாண்டுவதில்லை.

எனினும், ஆண்டுதோறும் படிக்க விரும்புவோர் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே வருகிறது. அனைவருக்கும் இலவசமாகத் தங்குமிடம், உணவு, பயிற்சி, பாடப்புத்தகங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தருவது, மனிதநேய மையத்திற்கு, இயலாத காரியமாகி விடுகிறது.

எனவே, அனைவரும் வீட்டில் இருந்தபடியே, தேர்வுக்குத் தயாராகும் வகையில், இலவச பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2019 மார்ச் முதல், ‘தொலைக்காட்சி’ வழியே, இலவசமாக போட்டித் தேர்வுக்கு, பயிற்சி அளிக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மாணவர்கள், வேலையில் உள்ளவர்கள் என, அனைத்துத் தரப்பினரும், வீட்டிலிருந்தபடியே பயிற்சிக்கு தயாராகலாம். இவ்வாறு பயிற்சி பெறுவோருக்கு, மனிதநேய அறக்கட்டளை சார்பில், நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறுவோர், போட்டித் தேர்வுக்கு தயாராக, தங்குமிடம், பயிற்சி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

இது குறித்த முழு விபரங்களைப் பெற, மனிதநேய அறக்கட்டளையின், mntfreeias.com என்ற, இணையதளத்தைப் பார்வையிடவும். மேலும் விவரங்களுக்கு, 044 – 24330095 என்ற, எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைக்காட்சி வழியே நடத்தப்பட உள்ள, பயிற்சிகளைப் பெற இயலாத நிலையில், கிராமங்கள் அல்லது மாணவ- மாணவியர் இருந்தால், அவர்களுக்கு உதவ விரும்பும், தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனிதநேய அறக்கட்டளையுடன் தொடர்பு கொண்டு, உதவிகளைப் பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share