சென்ற பிப்ரவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் அரசின் வரி வருவாய் ரூ.85,174 கோடியாகக் குறைந்துள்ளது.
மார்ச் 27ஆம் தேதி மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் பிப்ரவரி மாதத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதில் ஜனவரி மாதத்தில் ரூ.86,318 கோடியாக இருந்த வரி வருவாய் பிப்ரவரி மாதத்தில் ரூ.85,174 கோடியாகக் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல, ஜிஎஸ்டியின் கீழ் பதிவுசெய்துள்ள வரி செலுத்துவோரின் எண்ணிக்கை ஜனவரியில் 1.03 கோடியிலிருந்து பிப்ரவரியில் 1.05 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், மார்ச் 25 வரையில் மொத்தம் 59.51 லட்சம் ஜிஎஸ்டி 3பி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த அளவானது பிப்ரவரி மாதத்துக்கான மொத்த ரிட்டன் தாக்கல் அளவில் 69 சதவிகிதமாகும்.
பிப்ரவரி மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி வாயிலான வருவாய் ரூ.27,085 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி வருவாய் ரூ.33,880 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.42,456 கோடியாகவும் இருந்தது. மேலும், இழப்பீட்டு வரியாக ரூ.7,317 கோடியை அரசு வழங்கியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் சரிந்துள்ள நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் முதல் வரி வசூல் அதிகரிக்கும் என்று மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத் தலைவர் வனஜா சர்னா நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதுபற்றி சென்ற வாரம் மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய சர்னா, ”அடுத்த மாதம் முதல் ஜிஎஸ்டி வாயிலான வருவாய் ரூ.90,000 கோடிக்கு மேலேயே இருக்கும். ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட போது இருந்த நடைமுறைச் சிக்கல்கள் தற்போது சரிசெய்யப்பட்டு வரி தாக்கல் சுலபமாக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.�,