�இந்தியாவின் கிடங்குகள் மற்றும் லாஜிஸ்டிக் துறையைச் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்னும் இரண்டு ஆண்டுகளில் 100 சதவிகிதம் வளர்ச்சியடையச் செய்யும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் சேவைகள் நிறுவனமான ஜேஎல்எல் இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘2021ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சேமிப்புக் கிடங்குகளுக்கான பரப்பு 112 சதவிகிதம் அதிகரிக்கும். கிடங்குகள் மேம்பாட்டிலும், மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காக்கள் உருவாக்கத்திலும் ஜிஎஸ்டி முக்கியப் பங்காற்றுகிறது. இதன் மூலம் இந்தியாவின் கிடங்குகள் துறை 20 சதவிகிதம் வளர்ச்சி காணும். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவில் 25 புதிய மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காக்கள் உருவாகும். தற்போதைய நிலையில் இந்தியாவின் சேமிப்புக் கிடங்குகளின் பரப்பு 140 மில்லியன் சதுர அடியாக உள்ளது. அது 297 மில்லியன் சதுர அடியாக உயரும்.
மாநிலங்களின் எல்லைப் பகுதிகள் சுருங்கி வரும் சூழலில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதால் கிடங்குகள் நடவடிக்கை மேம்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வந்தபிறகு வழக்கமான விநியோக முறையிலிருந்து மாறி பொருட்களைக் கொண்டுசெல்லும் முறை எளிதாகியுள்ளது. சிறிய சேமிப்புக் கிடங்குகள் வாயிலாக வரியை மிச்சப்படுத்துவதற்குப் பதிலாகத் திறனைப் பலப்படுத்துவதில் ஜிஎஸ்டி சிறந்த வழியை ஏற்படுத்தியுள்ளது. 2018 முதல் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிடங்குகள் சேமிப்புத் திறனை வலுப்படுத்த ரூ.45,000 கோடி வரையில் முதலீடு செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளது.�,