பரியேறும் பெருமாள் ஆனந்தியின் திரைப் பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது. சிறந்த திரைக்கதைகளைத் தேடி நடித்துவரும் அவர் அந்தப் படத்திற்கு பிறகு முக்கியமான படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார்.
மதயானைக் கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சாந்தனு இணைந்தார். ராவணக் கோட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துவருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவருகிறது.
பாடல் காட்சி ஒன்றில் சாந்தனுவும், ஆனந்தியும் சண்டை போட்டுக் கொள்ளும் விதமான காட்சி படமாக்கப்பட்டுள்ளது. “உடனடியாக ஈர்க்கும் விதமான பாடல். அருமையான நடன அசைவுகள். இது போன்ற பாடலில் முதன்முறையாக நான் நடிக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் சண்டை போடுவது சுவாரஸ்யமாக உள்ளது” என்று ஆனந்தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சாந்தனுவுடன் இணைந்து நடிக்கும் அனுபவம் குறித்து கூறிய அவர், “சாந்தனு நடிப்பிலும் நடனத்திலும் சிறந்து விளங்கக்கூடியவர். இதற்கு முன் அவரைப் பார்த்திராத தோற்றத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார்” என்று கூறியுள்ளார்.
இந்திரா என்ற கதாபாத்திரத்தில் ஆனந்தி நடிக்கிறார். தனது அடுத்தப் படங்கள் குறித்து அவர், “அலாவுதீன் அற்புதக் கேமரா படத்தில் சவாலான கதாபாத்திரம் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது நிறைய வாய்ப்புகள் வருகின்றன. கல்வியைப் பற்றி உருவாகும் படம் ஒன்றில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.�,