சுசீந்திரன் இயக்கும் ‘கென்னடி கிளப்’ படத்தின் சமீபத்திய மூவ், கோலிவுட்டில் புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட்டில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர்களைக்கூட பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரே நேரத்தில் பல படங்களில் பிஸி காட்டும் இயக்குநர் என்றால் தற்போதைக்கு அது சுசீந்திரனாகத்தான் இருக்கும். சமீபத்தில்தான் அவர் இயக்கிய ஜீனியஸ் திரைக்கு வந்தது. அதையடுத்து ஏஞ்சலினா, சாம்பியன் போன்ற படங்களில் தற்போது பிஸியாகவுள்ள அவர், ‘கென்னடி கிளப்’ எனும் புதிய படத்தையும் தற்போது இயக்கிவருகிறார்.
நடிகர்களும், இயக்குநர்களுமான சசிகுமார் மற்றும் பாரதிராஜா இதில் இணைந்து நடிக்கவுள்ளனர். தனது முதல் படமான வெண்ணிலா கபடி குழு எனும் படத்தை கபடிக் கதைக்களம் கொண்டு இயக்கியிருந்த சுசீந்திரன், இந்தப் படத்தையும் கபடியை மையமாக வைத்தே உருவாக்கவுள்ளார்.
சுசீந்திரனின் ஆஸ்தான நடிகரான சூரி இந்தப் படத்திலும் நடிக்கிறார். சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு, பாயும் புலி, மாவீரன் கிட்டு போன்ற படங்களுக்கு இசையமைத்த டி.இமானே இந்தப் படத்துக்கும் இசையமைக்கவுள்ளார். நல்லுசாமி பிக்சர்ஸ் எனும் நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் இந்தப் படத்தை தமிழில் மட்டுமல்லாது சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவிலும்கூட வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு. விளையாட்டு, போர் மற்றும் தற்காப்புக் கலை போன்றவற்றை மையமாகக் கொண்ட படங்களுக்கு சீனாவில் எப்போதுமே தனி மவுசு உண்டு. இங்கிருந்து சென்ற ஆமிர் கானின் தங்கல் படமும் பிரபாஸின் பாகுபலியும் சீனாவில் வசூலில் சக்கைப்போடு போட்டதன் பின்னணியும்கூட இதுதான் எனவும் அறியப்படுகிறது. எனவே கபடி எனும் உலகப்புகழ் பெற்ற விளையாட்டை வைத்து உருவாகும் இந்தப் படம், சீனாவிலும் புதிய அதிர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படம் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவந்தாலும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து கூறப்படவில்லை. இந்த நிலையில் அதையும் தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த வகையில் இந்தப் படம் வருகிற சித்திரைப் புத்தாண்டுக்கு வெளிவரவுள்ளது.�,