முக்கிய நகரங்களில் சேமிப்புக் கிடங்குகளைக் குத்தகைக்கு விடும் நடவடிக்கை 45 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சொத்து ஆலோசனை நிறுவனமான *சி.பி.ஆர்.இ.* வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் கிடங்குகளைக் குத்தகைக்கு விடும் நடவடிக்கை முக்கிய நகரங்களில் 45 விழுக்காடு அதிகரித்துள்ளது. இ-காமர்ஸ், சில்லறை வர்த்தகம், உற்பத்தித் துறை, மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக் நிறுவனங்களுக்குக் கிடங்குகளுக்கான தேவை அதிகரித்துள்ளதையடுத்து இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் கிடங்குகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பரப்பளவு முக்கிய 8 நகரங்களில் 10 மில்லியன் சதுர அடியாக அதிகரித்துள்ளது.
இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் குத்தகைக்கு விடப்பட்ட கிடங்குகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பரப்பளவு 6.9 மில்லியன் சதுர அடியாக மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டின் முதல் அரையாண்டில் குத்தகைக்கு விடப்பட்ட கிடங்குகளின் சராசரி பரப்பு உயர்வு 75,000 சதுர அடியாக மட்டுமே இருந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அது 90,000 சதுர அடியாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக பெங்களூருவில் 25 விழுக்காடும், தேசியத் தலைநகர் பகுதிகளில் 21 விழுக்காடும், மும்பையில் 20 விழுக்காடும், சென்னையில் 12 விழுக்காடும், ஹைதராபாத்தில் 10 விழுக்காடும் கிடங்குகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.’�,