�சிறுதானியங்கள்தாம் நம் முன்னோர் உண்டுவந்த பாரம்பரிய உணவு. கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துகள் நிறைந்தவை. சிறுதானியங்களை உண்பதன் மூலம் நமது செரிமான மண்டலம் மேம்படும். நம் உடலும் உள்ளமும் நலம் பெறும். உடல்நலம் காக்கும் உன்னதமான சிறுதானியங்களைப் பயன்படுத்தி சாதம், தோசை, ரொட்டி, கூழ், கஞ்சி தவிர, இந்த வரகு வெண்பொங்கலையும் செய்து அசத்தலாம்.
**என்ன தேவை?**
உமி நீக்கி சுத்தம் செய்த வரகு – ஒரு கப்
பாசிப்பருப்பு – கால் கப்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 3 சிட்டிகை
இஞ்சி – சிறிய துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
முந்திரிப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
வறுத்த வேர்கடலை – ஒரு டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
வரகு, பாசிப்பருப்பு இரண்டையும் அலசி, 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக வைத்து இறக்கி, கரண்டியால் குழைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து, பொங்கலில் சேர்த்துக் கலக்கவும். சிறிய கிண்ணத்தில் நெய் தடவி, பொங்கலை நிரப்பி தட்டில் கொட்டிப் பரிமாறவும். சாம்பார் அல்லது சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
சாமையிலும் இதேபோல் வெண்பொங்கல் செய்யலாம்.
[நேற்றைய ரெசிப்பி: சோளப் பணியாரம்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/02/06/7)�,