�ஊரடங்கின்போது வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் நிலையில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம். குறிப்பாக நாம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகக் கூடியதாக இருக்க வேண்டும். முக்கியமாக மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த மொச்சைப் பொரியலில் உள்ள கரையாத நார்ச்சத்து, சிறந்த மலமிளக்கியாகச் செயல்பட்டு, மலச்சிக்கலுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது. கரையாத நார்ச்சத்துகள் இழை வடிவத்தில் இருப்பதால் எளிய முறையில் உணவு செரிமான மண்டலம் வழியாகச் செல்ல உதவுகிறது.
**என்ன தேவை?**
பச்சை மொச்சை – 200 கிராம் (தோலுரித்தது)
காய்ந்த மிளகாய் – ஒன்று
கடுகு – ஒரு டீஸ்பூன்
பூண்டுப் பல் – ஒன்று
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
மொச்சையைச் சிறிதளவு தண்ணீர்விட்டு உப்பு சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு போட்டு, சிறிது வெடித்ததும் உளுத்தம்பருப்பு சேர்க்கவும். பூண்டைத் தோலுரித்து நசுக்கிப்போடவும். காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, வேகவைத்த மொச்சையைத் தண்ணீர் வடித்துச் சேர்த்து நன்றாகக் கிளறி தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
**குறிப்பு:** கரம் மசாலாத்தூள் போட்டும் இஞ்சி, பூண்டு, மல்லி (தனியா), தக்காளி அரைத்துச் சேர்த்தும் பொரியல் செய்யலாம்.
[நேற்றைய ரெசிப்பி: வேர்க்கடலைக் காரக்குழம்பு!](https://minnambalam.com/k/2020/04/15/3)�,