‘ஊரே அடங்கி வீட்டுக்குள்ளே இருக்கு. பால் பாக்கெட் போடுறவங்கள்ல இருந்து பாத்திரம் தேய்க்கிறவங்க வரை யாரையும் வீட்டுக்குள்ள அனுமதிக்கவே பயப்படுற சூழ்நிலை. இந்த நேரத்துல சாப்பாட்டுக்கு என்ன செய்றது?’ எனக் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறீர்களா? காலை நேரத்தில் வழக்கமான ரவை உப்புமா, இட்லி, தோசை எனச் சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கும் நிச்சயம் வித்தியாச பிரேக்ஃபாஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி கிச்சடி. மேலும், இது நாள் முழுவதும் உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும்.
**என்ன தேவை?**
ஜவ்வரிசி – 2 கப்
எண்ணெய் – கால் கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
தோல் சீவி மிகப் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு – ஒரு கப்
எலுமிச்சைச் சாறு – ஒரு பழம்
கரகரப்பாகப் பொடித்த வறுத்த வேர்க்கடலை – ஒரு கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
**எப்படிச் செய்வது?**
ஜவ்வரிசியை மூன்று முறை தண்ணீரில் நன்கு கழுவி, முதல் நாள் இரவே ஊறவைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், இஞ்சி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, ஊறவைத்த ஜவ்வரிசியைச் சேர்க்கவும். சிறிது நேரம் வறுபட்ட பிறகு, ஜவ்வரிசியின் வெள்ளை நிறம் மறைந்து கண்ணாடிபோல் ஆகிவிடும். இந்தப் பதம் வந்தபிறகு, அடுப்பிலிருந்து இறக்கி அதில் எலுமிச்சைச்சாறு, வேர்க்கடலைப்பொடி மற்றும் கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறலாம்.
[நேற்றைய ரெசிப்பி: துளசி டிகாக்ஷன்](https://minnambalam.com/health/2020/04/01/4/kitchen-keerthna-tulasi-tea)�,