மிஹிர் ஸ்வரூப் சர்மா
இந்திய அரசியலில் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்துவந்த காங்கிரஸ் கட்சி 2014ஆம் ஆண்டில் 44 தொகுதிகளை மட்டுமே வென்றது. தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றமில்லை. 2014ஆம் ஆண்டில் காங்கிரஸுக்கு நேர்ந்தது சோகக்கதையாக இருந்தாலும் தற்போது நடந்தது கேலிக்கூத்தாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது ராகுல் காந்திக்குப் பாராட்டுகள் குவிந்தன. ஆனால், அரசியலில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தத் தவறிவிட்டது காங்கிரஸ். நாடாளுமன்ற மட்டத்தில் வடக்கிலும் மத்திய இந்தியாவிலும் தனக்கு இருந்த செல்வாக்கை மீட்டெடுக்கத் தவறியது. மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து அது துடைத்தெறியப்பட்டுள்ளது.
இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று, காங்கிரஸின் கோட்டையான ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் இரு மாநிலங்களாகப் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் அங்கிருந்து நிறைய தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க முடியும். கர்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் தோல்வியடைந்ததன் விளைவாக முக்கியப் போட்டியாளர் என்ற அந்தஸ்தையே இழந்துள்ளது.
முன்பு இந்தியாவில் ஒரு தெளிவான அரசியல் கட்டமைப்பு இருந்தது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி முக்கிய சக்தியாக இருந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலங்களின் நலனுக்கு ஏற்ப காங்கிரஸுக்குப் பல்வேறு எதிர்க்கட்சிகள் இருந்தன. குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸுக்குப் பிரதான மாநில எதிரியாக பாஜக இருந்தது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் பிரதான சக்தி என்ற பதவியைத் தற்போது காங்கிரஸிடமிருந்து பாஜக பெற்றுள்ளது.
**சித்தாந்தத்தின் தோல்வி!**
இந்தியா என்பதற்கு பாஜக ஒரு கருத்து வடிவத்தையும், காங்கிரஸ் ஒரு கருத்து வடிவத்தையும் கொண்டுள்ளது. இந்த இரு கருத்து வடிவுகளுக்கும் ஏற்பட்ட போரில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸின் கருத்தை அறிவதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங்கைப் பற்றி ஆய்வு செய்யலாம். திக்விஜய சிங் மிகுந்த பக்திமான். ஆனாலும் அவரை ஆர்எஸ்எஸ் அமைப்பு வெறுக்கிறது. ஏனென்றால் அவர் காங்கிரஸின் கருத்து வடிவத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிரிவினைவாத அரசியலுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்து பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து, அனைவரையும் ஒருங்கிணைத்து நிர்வகிப்பதே அரசின் பணியாக இருக்க வேண்டும். ஆனால், இன்று இஸ்லாமியர்கள் அரவணைக்கப்படும்போது அதை ‘சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் அரசியல்’ என்கின்றனர் பாஜகவினர். போபாலில் சாத்வி பிரக்யா சிங் தாகூரிடம் தோல்வியடைந்துள்ளார் திக்விஜய சிங். இது சித்தாந்தத்தின் தோல்வி என்று சொல்லிவிட்டு நகரலாம்.
இதேபோலத்தான் தேசிய அளவிலும் காங்கிரஸின் சித்தாந்தத்தை வீழ்த்தியுள்ளது நரேந்திர மோடியின் சித்தாந்தம். இந்தியா என்பது அடிப்படையில் இந்து, இந்தியா என்பது ஒரே நாகரிகம், இந்தியா பல்வேறு படையெடுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது, உலக அரங்கில் இந்தியா வலுவாக இருக்க வேண்டும், அதற்கு இந்து என்ற அடையாளத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் பாஜகவின் கருத்தியல்.
**இந்து என்னும் அடையாளம்**
இந்தக் கருத்தியலுக்கு வித்திட்டவர்கள் சாவர்க்கர், கோல்வால்கர் போன்றவர்களாக இருக்கலாம். மோடியின் தலைமையில் சமூக, பொருளாதார ரீதியாக இந்து என்ற குடையில் அனைவரும் ஒருங்கிணைக்கப்படுகின்றனர்.
மற்ற அனைத்து அடையாளங்களும், இந்தியாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொடுக்கும் கருத்தியலும் பாஜகவுக்கு ஆபத்தானவை. ஒருமித்த அடையாளங்கள், விவாதத்துக்குட்படுத்தப்படும் அடையாளங்கள் ஆகியவையும் இந்து என்ற அடையாளத்துக்குள் கொண்டுவரப்படுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், வங்காளிகள், லிங்காயத்துகள், சிறுபான்மையினர் அனைவரும் அவர்கள் இந்துக்கள் என்பதை முதலில் உணர்ந்தால் இந்தியா வளர்ச்சியடையும் என்பதே பாஜகவின் முன்மொழிதல்.
எதிர்காலத்தில் இந்தியா வலுவானதாகவும், செழிப்பானதாகவும், இந்துவாகவும் இருக்க வேண்டுமென மோடி விரும்பினால், இம்மூன்றும் ஒருசேர நிறைவேறாது என 2014ஆம் ஆண்டிலேயே நான் எழுதியிருந்தேன். அதுதான் இன்று நடந்துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது அக்கட்சி கூட்டணி விவகாரங்களில் தோல்வியுற்றதோ, ராகுல் காந்தியாலோ, பாஜகவைவிட நிதியாதாரம் குறைவாக இருந்ததாலோ அல்ல. சித்தாந்த ரீதியான விவாதத்தில் காங்கிரஸ் தோல்வியுற்றுள்ளது.
மகாராஷ்டிரத்தில் பிரகாஷ் அம்பேத்கர், உ.பி.யில் பகுஜன் சமாஜ் – சமாஜ்வாதி கூட்டணி, டெல்லியில், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தால் காங்கிரஸால் கூடுதலாகச் சில தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க முடியும். ஆனால், மோடிக்கு இருக்கும் அறுதிப் பெரும்பான்மையை ஒப்பிடுகையில் அந்தக் கூடுதல் தொகுதிகள் மிகச் சொற்பம். 100 தொகுதிகளுக்கு மேல் வாங்கினாலும் பயனில்லை.
தோல்விக்கு ராகுல் காந்திதான் காரணம் என பலரும் விவாதங்களை முன்வைத்து வருகின்றனர். மக்களைக் கவரும் தன்மை ராகுல் காந்திக்கு இல்லை என்று பலரும் கூறுகின்றனர். ஏனென்றால், காங்கிரஸின் கருத்தியல்களை அவர் தொடர்ந்து பிரதிபலிக்கிறார். ஆனால், அந்தக் கருத்துகளோ மிகச் சிலரை மட்டுமே கவர்கின்றன. அவர் முட்டாள்தனமானவற்றைப் பேசுவதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களும் முட்டாள்தனமானவற்றைப் பேசியுள்ளனர். இருப்பினும் ராகுல் காந்தி தோல்வியுற்றதால் அவரை முட்டாளாகச் சித்திரிக்கின்றனர்.
ராகுல் காந்திக்குப் பதிலாக அவரது இடத்தில் வேறு ஒரு தலைவரைப் பொருத்திப் பார்க்க முடியுமா? அவர் இடத்தில் யாரை வைப்பது? 2014, 2019 ஆண்டுகளில் ஏற்பட்ட அலைகளைத் தாங்கக்கூடிய அளவுக்கு காங்கிரஸில் யாரேனும் தேசிய தலைவர் உண்டா? இல்லை. இதற்கும் காந்தி குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாறாக உணர்வுபூர்வமான, சித்தாந்த காரணிகளே இதற்குக் காரணம். சோனியாவும், ராகுலும் வலுவிழந்துகொண்டே இருக்கின்றனர். ஆளுமைகளைக் கடந்து இதற்குச் சில காரணிகள் உள்ளன.
காங்கிரஸ் கட்சி தன்னைத்தானே கலைத்துக்கொண்டுவிடலாம் என்று தேர்தல் அறிவியல் ஆய்வாளரும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான யோகேந்திர யாதவ் வாதிட்டுள்ளார். காங்கிரஸ் மூடிவிட்டால் இந்தியாவுக்கு காங்கிரஸ் வழங்கும் கருத்தியலும் கொலை செய்யப்படும்.
காங்கிரஸின் இந்தியக் கருத்தியலுக்கு மாற்றான கருத்தியலை யோகேந்திர யாதவ் உட்பட மற்றவர்கள் முன்வைப்பதில்லை. இந்திரா காந்தியின் காலம் முதல் அரசியல் ரீதியாக காங்கிரஸ் நிர்வகிக்கப்படும் முறையில் எனக்கு உடன்பாடில்லை. இந்திய அரசியலில் கூட்டாட்சி சக்திகள் பக்கமே எனது சித்தாந்த சார்பு இருக்கிறது. காங்கிரஸின் கருத்தியலுக்கு மாறாக பாஜகவின் கருத்தியல் விதைக்கப்பட்டு அது மாநில சக்திகளுக்கு எதிராகத் திரும்புவதில் எனக்கு விருப்பமில்லை.
நாம் மோடியின் இந்தியாவில் வசிக்கவில்லை. இந்தியர்களின் இந்தியாவில் நாம் வசிக்கிறோம். பெரும்பாலான இந்தியர்கள் விரும்பும் இந்தியக் கருத்தியலை மோடி பிரதிபலிப்பதால் அவரை மக்கள் ஆதரிக்கின்றனர். இந்தத் தேர்தல் முடிவுகளுக்கு வேறு எந்த விளக்கமும் வழங்கத் தேவையில்லை.
**நன்றி: [என்டிடிவி](https://www.ndtv.com/opinion/dont-blame-rg-he-is-not-why-modi-has-crushed-congress-2041123)**
**தமிழில்: அ.விக்னேஷ்**
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!](https://minnambalam.com/k/2019/05/25/81)
**
.
**
[ஓ.பன்னீரின் ‘பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/25/30)
**
.
**
[மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?](https://minnambalam.com/k/2019/05/225/55)
**
.
**
[மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?](https://minnambalam.com/k/2019/05/25/25)
**
.
**
[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)
**
.
.
�,”