aஎங்கே ஆனந்தம்? – சத்குரு ஜகி வாசுதேவ்

Published On:

| By Balaji

கேள்வி: ஆசிரமத்தில் இங்கே அமர்ந்து, இந்த உரையைக் கேட்பதற்கு அழகாக உள்ளது. ஆனால், இரைச்சலும் பரபரப்புமாக உள்ள நகரத்துக்கு நாங்கள் திரும்பிச் செல்லும்போது அங்குள்ள சூழல் வேறு மாதிரியாக இருக்கிறது. அதேநேரத்தில் அந்தச் சூழலிலிருந்து எளிதில் விடுபட்டு இங்கு வரவும் முடியவில்லை. ஆகவே நாங்கள் என்ன செய்வது?

**சத்குரு:** எந்த சூழலிலிருந்தும் விடுபட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அல்லது நீங்கள் ஆசிரமத்துக்கு வர வேண்டியது அவசியம் என்றும் சொல்லவில்லை. நாம் நிச்சயம் ஒரு சாதகமான சூழலைத் தேடவே செய்கிறோம். ஆனால் உங்கள் தவிப்புக்குச் சூழல் மட்டும் 100 சதவிகிதம் காரணமில்லை.

ஒரு மனிதர் தான் செய்கின்ற ஒவ்வொரு செயலையும், மகிழ்ச்சியைத் தேடியே செய்வதை நீங்கள் கவனிக்கிறீர்களா? நீங்கள் செய்யும் எல்லா விஷயங்களையும் அடிப்படையில் எதற்காக செய்கிறீர்கள்? உதாரணமாக, நீங்கள் ஏன் ஒரு குடும்பத்தை உருவாக்கினீர்கள்? அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று உங்களுக்குள் எங்கோ ஒரு நம்பிக்கை வைத்தீர்கள். ஒருவேளை சிலர் மட்டும் குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக திருமணம் செய்திருக்கலாம். ஆனால், நீங்கள் ஏன் அந்த அழுத்தத்துக்கு இடம் கொடுத்தீர்கள்? ஏனெனில், குடும்பத்தினரை மகிழச் செய்வது நம்முடைய மகிழ்ச்சி என்று உங்களுக்குள் எங்கோ நீங்கள் எண்ணம் கொண்டீர்கள். நீங்கள் கல்வியைத் தேர்ந்தெடுத்தீர்கள். உங்களது தொழிலைத் தேர்வு செய்தீர்கள். எத்தனையோ விஷயங்களை நீங்கள் வாழ்வில் தேர்ந்தெடுத்தீர்கள். ஏனெனில், இவை எல்லாமே உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் கருவிகள் என்றுதான் நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் உங்களது கல்வித் தகுதியை வளர்த்து அதற்கான பணியைத் தேடுகிறீர்கள். தொழில் நடத்துகிறீர்கள். குடும்பங்களை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடுகிறீர்கள். இவ்வளவும் எதற்காக? இந்த எல்லா விஷயங்களும் நிகழ்ந்தால், நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று நம்புகிறீர்கள். ஒவ்வொரு கட்டத்திலும், “அந்த வேலை எனக்குக் கிடைத்தால், நான் மகிழ்ச்சியடைந்து விடுவேன். எனக்கு அந்த பதவி உயர்வு கிடைத்தால், நான் மகிழ்ச்சியடைந்து விடுவேன். எனக்குத் திருமணம் முடிந்துவிட்டால், நான் மகிழ்ச்சியடைந்து விடுவேன். எனக்கு ஒரு குழந்தை பிறந்தால், நான் மகிழ்ச்சியடைந்து விடுவேன்” என்று நீங்கள் நம்புகிறீர்கள். ஒவ்வொரு கட்டத்திலும், “இந்த விஷயங்கள் நிகழ்ந்தால், நான் மகிழ்ச்சி அடைவேன்” என்று நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள். ஆகவே, இந்த எல்லா விஷயங்களையும் நீங்கள் மகிழ்ச்சித் தேடுதலில் செய்கிறீர்கள்.

நீங்கள் மகிழ்ச்சியைத் தேடி நேரடியாகச் செய்கிறீர்கள் அல்லது அதை சுற்றி வளைத்துச் செய்கிறீர்கள். ஆனால், நீங்கள் தேடுவதென்னவோ மகிழ்ச்சியைத்தான். சொர்க்கத்தின் மூலமாகவோ அல்லது மனைவி கணவன், மது அல்லது வேறு ஏதோ ஒன்றின் வழியில் தேடுகிறீர்கள் அல்லது அதை நேரடியாகவே அணுகுகிறீர்கள். மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் நோக்கமென்றால், அதன் அடிப்படையிலேயே அதை நோக்குவோம். நீங்கள் எப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தீர்களோ, அப்போது வெளியிலிருந்து மகிழ்ச்சி உங்கள்மீது மழையாகப் பொழியவில்லை. அது உள்ளிருந்து வெளிப்பட்டது. வெளிப்புறத்தில் தூண்டுதல் இருந்திருக்கலாம். ஆனால், உங்கள் மகிழ்ச்சி உங்கள் உள்நிலையில்தான் நிகழ்ந்தது. மகிழ்ச்சியைத் தூண்டிவிட்ட ஏதோ ஒன்று வெளியில் நிகழ்ந்தாலும் மகிழ்ச்சியின் அனுபவம் எப்போதும் உங்களுக்குள்தான் நிகழ்ந்தது. மகிழ்ச்சியானது உங்களுக்குள் இருக்கிறது. ஆனால், அதன் திறவுகோல் வெளியில் உள்ளது. இதைப் புரிந்துகொள்வதற்குப் பல வழிகள் உண்டு. ஒரு எளிய வழி என்னவெனில், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பல விஷயங்களோடு அடையாளம் கொண்டிருக்கலாம். இருப்பினும், இந்தக் கணம் நீங்கள் இங்கு அமரும்போது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு உயிர் சக்தியாகத்தான் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு மருத்துவராக இருக்கலாம், நீங்கள் ஒரு காவல்துறை அதிகாரியாக இருக்கலாம், நீங்கள் ஒரு இல்லத்தரசியாக இருக்கலாம். சமூகரீதியாக நீங்கள் பல விஷயங்களைச் செய்து கொண்டிருக்கலாம். ஆனால், இந்தக் கணம், பிரபஞ்சரீதியாக நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு உயிர்சக்தியாகத்தான் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு படைப்பின் துளியாகத்தான் இருக்கிறீர்கள். இந்த உயிர் சக்தியானது, இப்போது எதையோ செவிமடுத்துக் கொண்டிருக்கலாம் அல்லது பேசிக்கொண்டிருக்கலாம் அல்லது வேறு எதையோ செய்து கொண்டிருக்கலாம். ஆனால், உங்களது அடையாளங்களைக் கடந்து, உங்கள் அனுபவத்தை மட்டும் நீங்கள் பார்த்தால், ஒரு குறிப்பிட்ட விதமாகச் செயல்படும் ஒரு குறிப்பிட்ட அளவு சக்தியாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்.

“நான்” என்று இப்போது நீங்கள் கூறிக்கொள்ளும் இந்த உயிர்சக்தியானது, சில நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சில நேரங்களில் மிகவும் வேதனையில் இருக்கிறது, சில நேரங்களில் மிகவும் அமைதியாக, சில நேரங்களில் குழப்பமாக, சில நேரங்களில் துன்பமாக மற்றும் சில நேரங்களில் பரவசமாக இருக்கிறது. இந்த உயிர்சக்தி இத்தகைய எல்லா உணர்வுகளையும் அனுபவிக்கும் திறன் பெற்றுள்ளது. நீங்கள் துயரத்தில் இருப்பதற்கோ அல்லது ஆனந்தமாக இருப்பதற்கோ தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டால், நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஆனந்தமாக இருக்கவே தேர்வு செய்வீர்கள். ஒவ்வொருவருக்கும் அந்த அளவுக்குப் புத்திசாலித்தனம் உள்ளது. “தயவுசெய்து ஆனந்தத்தைத் தேர்ந்தெடுங்கள். துயரத்தைத் தேர்ந்தெடுக்காதீர்கள்” என்று உங்களுக்குக் கூறுவதற்காக, யாரும் ஒரு வேதத்தையோ அல்லது ஒரு உபநிஷதத்தையோ எழுத வேண்டியதில்லை. உங்களுக்குள் இருக்கும் உயிர்சக்தியே, ஆனந்தமாகவும் பரவசமுடனும் இருப்பதற்குத்தான் பேராவலுடன் உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், இவ்வளவு அதிகமான துயரம் நிகழ்ந்திருப்பது ஏனென்றால், உங்கள் உயிர்சக்திகள் நிர்பந்தத்தின் பேரில் செயல்படுகின்றன. அவை விழிப்பு உணர்வுடன் செயல்படுவதில்லை. நீங்கள் வாழும் சூழ்நிலைக்குப் பதில்வினையாகவே அவை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. உங்களுக்கு வெளியில் நிகழ்பவைதான், உங்களது உள்நிலை அனுபவத்தை நிர்ணயிக்கிறது என்றால், அப்போது உங்கள் வாழ்வின் போக்கே, தற்செயலானதாகத்தான் இருக்கும். நீங்கள் தற்செயலான ஒரு மனிதராக இங்கே வாழ்ந்தால், நீங்கள் எப்போதும் ஒரு பெரிய துயர மூட்டையாகத்தான் சீரழிவாகத்தான் இருப்பீர்கள். அப்படி நீங்கள் இங்கே வாழும்போது, ஆனந்தமாக இருப்பது மிகவும் கடினம். இப்போது நிகழ்ந்திருப்பது இதுதான்.

ஒருநாள், சுருங்கிய தோலும், ஒடுங்கிய உடலுமாக இருந்த ஒரு முதியவர், “மணமாகாதவர்களுக்கு மட்டும்” பிரத்யேகமாக நடத்தப்பட்ட கிளப் ஒன்றில் காலையிலிருந்து தொடர்ந்து மது அருந்தியும், புகைபிடித்தவாறும் அமர்ந்திருந்தார். இதைக் கவனித்த ஒரு பெண்மணி அவரிடம் சென்று, “ஓ வயதான இளைஞனே, நீங்கள் எப்படி இந்தக் காலை வேளையிலேயே குடித்துக் கொண்டும், புகைத்துக் கொண்டும் இருக்கிறீர்கள்? நீங்கள் உலகில் எப்போதும், எதற்கும் கவலைப்படாதவர் போல் தோன்றுகிறது” என்றார். “ஆமாம், எனக்கு இந்த உலகில் எதுவும் பொருட்டில்லை” என்று கூறினார். அந்தப் பெண்மணி, “உங்கள் வாழ்வின் ரகசியம்தான் என்ன? எப்படி உங்களால் இந்த மாதிரி இங்கு இருக்க முடிகிறது?” என்று மறுபடியும் கேட்டார். அந்த வயதான மனிதர் கூறினார், “என் வாழ்வின் ரகசியம் இதுதான். மதிய வேளைக்குள் ஐந்தாவது சுற்று விஸ்கியுடன், நாள் முழுவதும் தொடர்ந்து புகைத்தவாறும், எனக்கு விருப்பமான உணவைச் சாப்பிட்டுக் கொண்டும் இருப்பேன்.”

அந்தப் பெண், “மிகவும் வியப்பாக உள்ளது. எப்படி இத்தனை வருடங்களாக இப்படி இருக்க முடிகிறது? இருப்பினும், உங்களுக்கு என்ன வயது?” என்றார். “எனக்கு 22 வயது” என்று பதில் வந்தது. நல்வாழ்வு என்றால் பலதரப்பட்ட மக்களுக்கும், பலதரப்பட்ட கருத்துகள் உண்டு. ஆனால், அடிப்படையில், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, உண்மையிலேயே நன்றாக இருப்பதாக உணர்கிறீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, உங்களது உடல் நோயுற்று இருந்தாலும், நீங்கள் நன்றாக இருப்பதாகவே உணர்கிறீர்கள். அல்லது வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால், அமைதியும் ஆனந்தமும் நிறைந்திருப்பதுதான் மனிதர்களின் நல்வாழ்வு என்பது. ஆனால், வாழ்வின் அடிப்படைகளை நீங்கள் எங்கேயோ தவறவிட்டுவிட்டீர்கள். அதன் அரிச்சுவடியை நீங்கள் உள்வாங்கவில்லை. அதனால்தான் மகிழ்ச்சியானது மிகவும் முக்கியமாகவும், அடிப்படையாகவும் இருந்தாலும், பெரும்பாலான மக்களுக்கு அது இன்னமும் எட்டாக்கனியாகத் தோன்றுகிறது.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள – [email protected]/* */�,”