�
கெயில் நிறுவனத்தை இரண்டாகப் பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய பொதுத் துறை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான கெயிலின் (GAIL) வர்த்தகத்தை விரிவுபடுத்தும் விதமாகவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் இந்நிறுவனத்தை இரண்டாகப் பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டி.கே.சராஃப் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், எரிவாயுக் குழாய்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் தொழில் இரண்டுக்கும் தனித்தனிக் கணக்குகளைத்தான் கெயில் நிறுவனம் கையாண்டு வருகிறது. எனவே இவற்றை இரண்டாகப் பிரிப்பது எளிதானதுதான். 2018-19 நிதியாண்டு முடிவுக்குள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு எரிவாயுக் குழாய்கள் பிரிவு தனியாகவும், சந்தைப்படுத்துதல் பிரிவு தனியாகவும் இயங்கும்” என்று கூறியுள்ளார்.
நாட்டிலுள்ள பல மின்னுற்பத்தி நிலையங்கள் மற்றும் கண்ணாடி, செராமிக் மற்றும் சிமென்ட் தயாரிப்பு உள்ளிட்ட சிறு ஆலைகள் இப்போது வரையிலும் அதிகளவில் மாசு ஏற்படுத்தும் டீசல், நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்களைத்தான் பயன்படுத்துகின்றன. எனவே இயற்கை எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்க கெயில் நிறுவனத்தை இரண்டாகப் பிரித்தால் வேகமாகச் செயல்பட இயலும் என்று தனித்தனியாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திரவ இயற்கை எரிவாயு பயன்பாட்டை 20 சதவிகிதம் அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,”