ஒரு கப் காபி!
நம் அன்றாட வாழ்வு சுழன்றுகொண்டிருக்கும்போது நாம் பல முக்கியமான விஷயங்களைக் கவனிப்பதில்லை; அல்லது அவற்றை முக்கியமானதாகவே கருதுவதில்லை. நமது தினசரி சுழற்சியில் ஓர் இடர்ப்பாடு ஏற்படும்போது, அதுவரை நாம் சற்றும் கண்டுகொள்ளாத விஷயங்கள்கூட நமக்கு முக்கியமானதாகத் தெரியும்; அல்லது நமது கவனத்தை ஈர்க்கும்.
நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது நான்காம் வயது வரை வாய்திறந்து பேச இயலாதவராக இருந்தார். அவரால் பேச இயலவில்லை என்பதால் அவரது பெற்றோர் மிகவும் கவலைப்பட்டனர்.
ஒருநாள் இரவு உணவு வேளையில் திடீரென ஐன்ஸ்டைன், “இந்த சூப் மிகவும் சூடாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். அவரது பேச்சைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்த பெற்றோர், “நீ ஏன் இத்தனை நாளாகப் பேசவில்லை?” என்று கேட்டனர்.
அதற்கு அவர், “ஏனென்றால் இந்நாள் வரை எல்லாமே சீராகவும், முறையாகவும் இருந்தது” என்று பதிலளித்தார்.
சிறுவன் ஐன்ஸ்டைன் பேசாமலே இருந்ததற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். ஆனால், அன்றாட நிகழ்ச்சிகள் சீராகப் போய்க்கொண்டிருக்கும்வரை நமது செயல்பாடுகளிலும் மாற்றம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கும். அதில் பிசிறுதட்டும்போது நமது நடவடிக்கைகளிலும் மாற்றம் இருக்கும் என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.
இதுபோன்ற அனுபவம் நம் அனைவருக்குமே ஏற்பட்டிருக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. மருத்துவர் ஊசியை எடுத்தாலே இரண்டு கிலோமீட்டர் ஓடக்கூடிய நான் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டேன்.
அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அன்றாட வாழ்க்கை சுழற்சி மாறிவிட்டது. ஓய்வு காலத்தைக் கடக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஓய்வில் இருந்தபோது பல யோசனைகள் வந்தன. ஓய்வுக் காலம் முடிந்த பிறகு இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என உத்வேகத்தில் ஒரு பட்டியலையே தயாரித்தேன். ஆனால், ஓய்வு முடிந்ததும் எதையும் செய்யவில்லை. ஏனென்றால் ஓய்வு முடிந்ததும் மீண்டும் தினசரி வாழ்வு சீராகச் சுழலத் தொடங்கிவிட்டது. இதில் ஏதேனும் மாற்றம் வரும்போதுதான் சிந்தனையில், நடவடிக்கையில் மாற்றம் வருகிறது. இது சீராகப் போய்க்கொண்டிருக்கும்போது புதிதாக எதுவும் உருவாவதில்லை.
இதைச் சமூகத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். புயல், வெள்ளம், மழை, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களால் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்படும்போது சமூகத்தின் அன்றாடச் சுழற்சி மாறுகிறது. அப்போது மக்கள் அனைவரும் மதம், சாதி போன்றவற்றைப் பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்கிறார்கள். ஆனால், சீற்றம் முடிந்து இயல்புநிலை திரும்பியதும் சமூக வேறுபாடுகளும் ஒவ்வாமைகளும் சேர்ந்தே திரும்பிவிடுகின்றன.
அன்றாட நிகழ்ச்சிகளின் சீரான தன்மை ஒரு விதத்தில் நமக்குள் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு அணை போடுகிறது. புதிய சிந்தனைகளைத் தடுத்துவிடுகிறது. இந்த அன்றாடச் சுழற்சியை மீறி மாற்றங்களை முன்னெடுப்பது பெரிய சவால்!
இந்தச் சவாலை அங்கீகரித்து எதிர்கொண்டால் அன்றாட நிகழ்வுகள் நம்முடைய அக மலர்ச்சியை முடக்கவிடாமல் தப்பித்துக்கொள்ளலாம்.
**- அ.விக்னேஷ்**
�,