சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 74ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் விழாவில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை வழிமுறைகள் குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன்படி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் நிகழ்ச்சியில் குறைந்தளவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மாநிலங்களில் காலை 9 மணிக்கு முதல்வர் கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படுதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். நிகழ்ச்சிகளை மக்கள் ஆன்லைன் மூலம் காண்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யலாம்.
சுதந்திர தின நிகழ்ச்சியில் கொரோனா நோய் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். கொரோனா தொற்று எதிர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவம் பணியாளர்கள் உள்ளிட்டோரும், நோய் தொற்றிலிருந்து மீண்டவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக, அழைக்கப்பட வேண்டும் என்று மத்திய உள் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
**எழில்**�,