இனி இ-பாஸ் கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!

Published On:

| By Balaji

இ-பாஸ் நடைமுறை தொடர்பாக மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கில், ஆகஸ்ட் மாதத்திற்கான தளர்வுகளை (அன்லாக்: 3) கடந்த ஜூலை 29ஆம் தேதி மத்திய உள் துறை அமைச்சகம் அறிவித்தது. அதன்படி, மாநிலத்துக்குள் செல்லவும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் தனிநபர்களுக்கும், சரக்குப் பொருட்களுக்கும் இ பாஸ் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுபற்றி [இ பாஸ் தளர்வு: அமித் ஷா அளித்தும் பறித்தாரா எடப்பாடி?] (https://minnambalam.com/politics/2020/07/30/35/epass-amit-sha-given-edapadi-taken) என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். இதனிடையே மற்ற மாநிலங்களில் இ-பாஸ் இல்லாத நிலையில், தமிழகத்தில் மட்டும் தொடர்வது குறித்து தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இதனால், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் என்று அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் மத்திய உள் துறைச் செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 22) கடிதம் எழுதினார். அதில், மத்திய அரசு அறிவித்த வழிகாட்டுதல்களை சுட்டிக்காட்டி, “மாநிலத்திற்குள் செல்லவும் அல்லது மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும் மாநில அரசுகள் எந்தவித விதிமுறைகளும் விதிக்கக் கூடாது. அதுபோல, சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் தடையில்லாமல் நடைபெற வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இ-பாஸ் வாங்கத் தேவையில்லை. ஏதாவது கட்டுப்பாடுகள் விதித்தால் அது மத்திய உள் துறை அமைச்சகம் விதித்த வழிகாட்டுதல்களை மீறுவது போல ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கு இடையேயான தனிநபர் நடமாட்டம் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிப்பது பொருளாதார செயல்பாடுகள் மற்றும் வேலைவாய்ப்பில் இடையூறை விளைவிக்கிறது. அத்துடன் விநியோகச் சங்கிலியையும் பாதிக்கிறது என்றும் அதில் குறிப்பிட்டு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

**எழில்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share