பிகார், ஹரியானா, திரிபுரா உள்ளிட்ட ஏழு மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராகக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக என்.என்.வோரா பதவி வகித்து வந்தார். காஷ்மீரில் மெகபூபா தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை நடத்தி வந்தது. மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றுக்கொண்டதையடுத்து அங்கு ஜூன் 20 முதல் ஆளுநர் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 21) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய ஆளுநராக பிகார் மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து பிகார் மாநிலத்துக்கு லால் ஜி டண்டன் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல மேலும் சில வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி திரிபுரா மாநிலத்துக்கு கேப்டன் சிங் சோலங்கியும், சிக்கிம் மாநிலத்துக்குக் கங்கா பிரசாத்தும், மேகாலயா மாநிலத்துக்கு ததகாட்ட ராயும், உத்தராகண்ட் மாநிலத்துக்கு பேபி ராணி மவுரியாவும், ஹரியானா மாநிலத்துக்கு சத்யதேவ் நாராயண் ஆர்யாவும் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.�,