_வெனிசூலா: இரு அதிபர்கள், ஒரே காரணம்!

public

உலக அரசியல் பழகு! 2 – ஆரா

வெனிசூலா…. உலகிலேயே அடர்த்தியான எண்ணெய் வளம் கொண்ட தென்னமெரிக்க தேசம். கொலம்பியா, பிரேசில் ஆகிய நாடுகளை ஒட்டி அமைந்திருக்கும் இந்த மலைப்பாங்கான நாடு, அண்மைக் காலமாகப் பொருளாதார, அரசியல், சமூக நெருக்கடிகளுக்கு உலக ஊடகங்களில் பெயர் பெற்றுவருகிறது.

இருபத்தியோராம் நூற்றாண்டின் மிக மோசமான சமூக, பொருளாதார நிலைமை கொண்ட நாடு என்று ஐரோப்பியப் பத்திரிகைகளும் அமெரிக்கப் பத்திரிகைகளும் வெனிசுலாவை வரையறுக்கின்றன. உலகில் எத்தனையோ நாடுகள் வெனிசூலாவின் (குரூட் ஆயிலுக்கு) எரிபொருளுக்கான மூலாதார எண்ணெய் வாங்க வரிசை கட்டியது போய், இன்று அந்நாட்டு மக்கள் உணவுக்காக நீண்ட வரிசைகளில் காத்துக் கிடக்கிறார்கள்,

ஒரு மாடு தென்பட்டால் அதைச் சுற்றி 15 பேர் சூழ்ந்துகொண்டு, தங்களுக்குத்தான் அந்த மாடு என்று பசி வெறி பிடித்துப் பங்கிட்டுக்கொள்கிறார்கள். கடந்த வருடத்திலிருந்தே வெனிசூலாவின் மாநகரங்களும் நகரங்களும் ஒவ்வொரு நாளும் போராட்டக் களமாகவே காட்சியளிக்கின்றன.

இந்த எண்ணெய் தேசம் ஏன் இன்று அல்லலுறுகிறது? சர்வதேச செலாவணி நிதியம் வெனிசூலாவில் 2019ஆம் ஆண்டு விலைவாசி உயர்வு உலகத்திலேயே முதல் இடத்தில் இருக்கும் என்று சொல்கிறது. கணக்கு போட்டு பார்த்தால் பத்து மில்லியன் சதவீதம் விலை உயர்வு இருக்கும் என்கிறது அந்த சர்வதேசப் பொருளாதார அமைப்பு. இந்தக் கணக்கை வைத்துப் பார்த்தால் வெகு விரைவில் வெனிசூலாவின் கரன்சி வெற்றுக் காகிதமாகவே கருதப்படும் என்ற என்ற நிலைமையே இப்போது இருக்கிறது.

நம் புரிதலுக்காக ஒரு காட்சி. வண்டலூர் மிருகக் காட்சி சாலையிலிருந்து மிருகங்கள் திருடுபோகின்றன. மயில்களைக் காணோம், மான்களைக் காணோம். குதிரைகளைக் காணோம். எங்கே அவை என்று விசாரணையில் இறங்கினால் மனிதர்களுக்கு உணவில்லாமல் வெளியே எங்கு தேடியும் உணவு கிடைக்காமல், கிடைத்தாலும் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ரூபாய் விலையேறிவிட்டதால் மிருகக்காட்சி சாலையில் இருக்கும் விலங்குகளை திருடிச் சென்று மாமிசமாக்கிச் சாப்பிடுகிறார்கள்.

ஒரு புரிதலுக்காகத்தான் வண்டலூர் என்று குறிப்பிட்டேன். இந்தக் காட்சி நடந்தது வெனிசூலாவின் தலைநகர் கரகாஸ் நகரில். அங்கே உள்ள மிருகக்காட்சி சாலையிலிருந்து ஒரு குதிரையைத் திருடுகிறார்கள். அதேபோல் ஃபால்கான் நகரத்தின் மிருகக்காட்சிச் சாலையிலிருந்து பன்றிகள் திருடப்பட்டன. வேறு எங்கு தேடியும் உணவு கிடைக்காததால் மக்கள் விலங்குகளை திருடுகிறார்கள்.

கடந்த சில மாதங்களாக வெனிசூலா மக்கள் தங்கள் உணவுக்கே தடுமாறுவதால் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளை விலங்குகள் நலத் தொண்டு நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதி ஒப்படைத்துவிட்டுக் கிளம்புகிறார்கள் என்கின்றனர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.

2014ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை வெனிசுலா நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் சுமார் 34 லட்சம் பேர். 2018ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி நாளொன்றுக்கு 5000 பேர் வெனிசூலா குடிமகன்கள் உணவும், வேலையும் தேடி நாட்டை விட்டு நகர்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிக அதிகமாய் நாடு விட்டு நாடு செல்வோர் வெனிசூலா மக்க்கள்தான் என்கின்றன ஐரோப்பிய பத்திரிக்கைகள்.

இவர்களில் சுமார் 11 லட்சம் பேர் பக்கத்து நாடான கொலம்பியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமான வெனிசூலியர்கள் பெரு தேசத்துக்குப் புறப்பட்டுவிட்டனர்

சுமார் 3 லட்சம் பேர் சிலி தேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் ஈக்குவேடார் நாட்டுக்கு இடம்பெயர்ந்தனர். ஒரு லட்சத்தி முப்பதாயிரம் வெனிசூலியர்கள் அர்ஜென்டினாவுக்கும், 96 ஆயிரம் மக்கள் பிரேசிலுக்கும், சுமார் மூன்று இலட்சம் பேர் அமெரிக்காவுக்கும் சென்றுவிட்டனர். 2 லட்சத்து 55 ஆயிரம் வெனிசூலா குடிமக்கள் ஸ்பெயின் தேசத்திற்கும் சென்றுவிட்டனர் என்கிறது ஐநாவின் சர்வதேசக் குடிபெயர்வோருக்கான அமைப்பு.

2019ஆம் ஆண்டில் வெனிசூலாவிலிருந்து வெளியேறும் மக்கள் தொகை 50 லட்சத்துக்கும் மேல் தாண்டிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கிறது இந்த அமைப்பு.

ஒரு பக்கம் உணவுக்குப் போராட்டம், பசியை எதிர்த்துப் போராட்டம். பட்டினியோடு போராட்டம். இன்னொரு பக்கம் அதிகாரத்துக்காக வெனிசூலா வீதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். உணவு தேடுபவர்கள் நாட்டை விட்டு வெளியே சென்றுகொண்டிருக்க, உயர்ந்த அரசியல் அதிகாரத்தைத் தேடுபவர்கள் நாட்டுக்குளிருந்து அதிபர் நிக்கோலஸ் மதுராவை எதிர்த்துப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

வெனிசுலாவுக்கு அதிபராக மதுரா இருக்கையில் திடீரென கடந்த ஜனவரி 23ஆம் தேதி குவைடோ என்பவர் நாட்டின் பொறுப்பு அதிபர் என்று தன்னைத் தானே பிரகடனம் செய்துகொண்டார்.

வெனிசூலா நாட்டை உலகின் வியப்புக்குறியாக மாற்றிக் காட்டிய சாவேஸ் மரணத்துக்குப் பிறகு 2013ஆம் ஆண்டு அவரது நம்பிக்கைக்குரியவரும் சாவேஸின் நீண்டநாள் தோழனுமான நிக்கோலஸ் மதுரா அதிபராகப் பொறுப்பேற்றார். 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் மதுரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

வெற்றி பெற்ற பிறகு மதுரா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ஏற்கனவே எனக்குள்ள பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி வரை இருக்கிறது. எனவே இந்தத் தேர்தல் வெற்றிக்கான எனது பதவிக் காலம் 2019 ஜனவரியில்தான் ஆரம்பிக்கிறது என்று அறிவித்தார்.

இந்த நிலையில்தான் வெனிசுலா நாட்டின் தேசிய சபையின் உறுப்பினரான 35 வயதான ஜான் குவைடோ ஜனவரி 23ஆம் தேதி, தன்னைத் தானே நாட்டின் பொறுப்பு அதிபராக பிரகடனம் செய்தார்.

இந்த ஒற்றைப் புள்ளி, இந்த ஒற்றை நொடிக்காக, இந்த ஒற்றை சூழலுக்காகதான் அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் காத்துக் கிடந்தனர். காத்துக் கிடந்தனர் என்று சொல்வது கூட தவறு. அந்தப் புள்ளியை உருவாக்கியதே அமெரிக்காதான்.

ஏனென்றால் வெனிசூலா மீது 2015ஆம் ஆண்டு பொருளாதார தடையை விதித்து, இப்படி ஒரு நிலையை வெனிசூலா அடைய வேண்டும் என்று திட்டமிட்டுக் காய்களை நகர்த்தியது அமெரிக்கா. அந்தத் திட்டங்களின், அந்த நகர்த்தல்களில் ஒரு முக்கியமான நாள்தான் ஜனவரி 23.

இப்போது வெனிசூலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரா என்பதை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அவற்றால் அழுத்தம் கொடுக்கப்படும் வெனிசூலாவின் சக லத்தீன் அமெரிக்க நாடுகளும்கூட ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னைத்தானே அதிபராகப் பிரகடனப்படுத்திக்கொண்ட ஜான் குவைடோவைதான் அதிபராக ஏற்போம் என அமெரிக்கா அறிவித்தது. இங்கிலாந்து அறிவித்தது. ஐரோப்பிய யூனியன் அறிவித்தது. இவற்றின் அழுத்தத்தால் 50க்கும் மேற்பட்ட நாடுகள் அந்த நிலையை எடுத்தன.

ஆனால் வெனிசூலாவின் முன்னாள் அதிபர் சாவேஸ் தனக்கு அடுத்த அதிபர் என்று முன்மொழிந்த நிக்கோலஸ் மதுராதான் வெனிசூலாவின் அதிபர் என்று ரஷ்யா, சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் அறிவித்திருக்கின்றன.

உலகைப் பொறுத்தவரை வெனிசுலாவுக்கு இரு அதிபர்கள். முதலாமவர், வெனிசூலாவின் இடதுசாரி இயக்கத்தின் தலைவரான சாவேஸின் ஆசிபெற்ற நிக்கோலஸ் மதுரா. இன்னொருவர் அமெரிக்க ஆசி பெற்ற ஜான் குவைடோ.

அந்தச் சின்னஞ்சிறு தேசம் ஏன் இப்படிச் சின்னாபின்னமாக்கப்படுகிறது? வெனிசுலாவின் அதிபராக இருந்த சாவேஸ் ஐநா சபையில் அமெரிக்காவைச் சாத்தான் என்றழைத்த அந்த நிமிடத்துக்கும் இந்த நிமிடத்திற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது.

இந்த வெனிசூலா நெருக்கடியின் வேருக்குச் சென்று பார்ப்போம்.

(அடுத்த சனியன்று சந்திப்போம்)

[உலக அரசியல் பழகு-1](https://minnambalam.com/k/2019/05/04/9)

.

.

**

மேலும் படிக்க

**

.

[ டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் அழுத்தம்; பொருளாளர் பதவியை இழக்கிறார் துரைமுருகன்?](https://minnambalam.com/k/2019/05/10/77)

.

[ஆகாஷ்- திலகவதி: என்ன நடந்தது? என்ன நடக்கிறது? முழு ரிப்போர்ட்!](https://minnambalam.com/k/2019/05/10/74)

.

[அமமுக சின்னத்தை அழித்தால் ரூ.1 லட்சம்: அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/05/10/27)

.

[கோவைத் தென்றல் ஓய்ந்தது!](https://minnambalam.com/k/2019/05/10/51)

.

.

[சசிகலாவுக்குத் தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி](https://minnambalam.com/k/2019/05/09/26)

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *