பார்வையற்றவர்களின் உலகத்தை திரை மொழியாக்கி வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. தமிழில் `ராஜபார்வை’, `காசி’ என பல படங்கள் வந்தாலும் இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளிவந்த `குக்கூ’ படமே பார்வையற்றவர்களின் வலிகளைத் துல்லியமாய் பதிவு செய்தது. இதே போல் பார்வையற்றவர்களின் உலகைப் பற்றி பதிவு செய்த படம் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் இந்தியில் வெளியான `காபில்’ திரைப்படமாகும். சஞ்சய் குப்தா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு `பலம்’ என்ற பெயரில் வெளியானது. ஆக்ஷன் த்ரில்லரான இந்த படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் ஹாலிவுட்டிற்குச் செல்கிறது.
இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷனும் யாமி கெளதமும் பார்வையற்றவர்களாக நடித்திருப்பார்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து, ஹ்ரித்திக் ரோஷன் வேலைக்குச் செல்ல, எதிரிகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் யாமி கௌதம் தற்கொலை செய்து கொள்கிறார். அவர்களை எப்படி பார்வையற்ற ஒருவர் பழிவாங்குகிறார் என்பதே கதை. ராஜேஷ் ரோஷன் இசையமைத்திருந்த இப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி – அயனன்கா போஸ் இணைந்து ஒளிப்பதிவு செய்திருந்தனர். `ஃபிலிம் கிராஃப்ட் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் ஹ்ரித்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.
தற்போது இப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய `20th Century Fox’ நிறுவனம் `காபில்’ டீமை அணுகியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் சஞ்சய் குப்தா, ஆம்.. மீடியாக்களில் வெளியாகியுள்ள இந்த செய்தி முற்றிலும் உண்மைதான். ஃபாக்ஸ் நிறுவனம் எங்களிடம் ரீமேக் ரைட்ஸை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. வெகு விரைவில் `காபில்’ ஹாலிவுட்டில் ரீமேக்காக அதிக வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.�,”