_ஸ்பெஷல்: மெர்சல் லாபம் – Nothing Personal; Just Business!

– சிவா

மெர்சல் திரைப்படத்துக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருந்தால் சக்சஸ் பார்ட்டியைக் கண்டிருக்கலாம். விஜய் ரசிகர்கள் 100 கோடி, 200 கோடி என்று சொல்வதைக் கேட்டிருந்திருக்கலாம். மெர்சலுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் இதெல்லாம் காணவில்லை. ஆனால், மெர்சல் சர்ச்சை அதன் வசூலை துரிதமாக்கியிருக்கிறது.

மெர்சல் திரைப்படம் ரிலீஸான ஐந்து நாள்களில் [130 கோடி ரூபாயை](https://www.forbes.com/sites/robcain/2017/10/24/for-vijays-mersal-%E2%82%B9200-crore31m-worldwide-gross-is-now-a-lock/#44c3b4c57b76) வசூலித்திருப்பதாக Forbes இணையதளத்தில் ராப் கெயின் எழுதியிருக்கிறார். மொத்தமாக ரூபாய் 250 முதல் 300 கோடிகள் வரை மெர்சலுக்கு மைலேஜ் உண்டு என்றும் அவர் கணிக்கிறார். அவர் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்திருப்பதாலும், சினிமா புரொடக்ஷனில் பல வருடங்களாக இருப்பதாலும் மெர்சல் ரூ.200 கோடி வசூலைத் தாண்டும் எனப் பலரும் நம்புகிறார்கள். அவர் எந்த அடிப்படையில் இதைச் சொல்கிறார் என்று பார்ப்பதுடன் கள யதார்த்தையும் கணக்கில்கொண்டால் நிஜ நிலவரம் தெரிந்துவிடும்.

ராப் கெயின் கணிப்பின்படி தமிழ் சினிமாவில் இதுவரை நான்கு திரைப்படங்கள் 200 கோடி வசூலைக் கடந்திருக்கின்றன. அதில் 500 கோடி வசூலை மிகவும் கிட்டத்தில் தவறவிட்டு (499 கோடிகள்) முதலிடத்திலிருப்பது 2016இல் வெளியான கபாலி. இரண்டாவது இடத்தில் எந்திரன் (289 கோடிகள்), மூன்றாவது ஷங்கரின் ஐ (240 கோடிகள்), நான்காவது இடத்தில் கமலின் விஸ்வரூபம் (220 கோடிகள்). இப்படியாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் நான்கு படங்களில் பாகுபலி திரைப்படத்தை இவர் கொண்டுவரவில்லை. என்ன தான் தமிழிலும் தெலுங்கிலும் ஒரேசமயத்தில் எடுத்திருந்தாலும் பாகுபலியின் இரண்டு பாகங்களையும் டோலிவுட்டின் படமாகத்தான் கெயின் பார்க்கிறார். இந்தியாவிலேயே முதன்முறையாக இரண்டாயிரம் கோடிகள் வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற பெருமையை மார்பில் தாங்கி நிற்கும் ஒரு படத்தை இப்படிச் சுருக்கியது சோகமானது. இந்தத் தகவல் ராஜ மவுலியைச் சென்றடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சரி விஷயத்துக்கு வருவோம்.

மெர்சல், மற்ற திரைப்படங்களைப் போலவே வசூலைத் தொடர்ந்தால் கிட்டத்தட்ட ரூ.300 கோடிகளை வசூல் செய்யும் என்பது கெயினின் கணக்கு. இதை அவர் எப்படிக் கணக்கிடுகிறார் என்றால், **கபாலி திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் 87.5 கோடிகள். அதன் கடைசி வசூல் 499 கோடிகள். இது முதல் நாள் வசூலைவிட 5.7 மடங்கு அதிகம். ஐ திரைப்படத்துக்கும் இதேபோல வொர்க்-அவுட் ஆகியிருக்கிறது. அது கிட்டத்தட்ட 6.7 மடங்கு முதல் நாள் வசூலைவிட அதிகமாக மொத்தத்தில் வசூல் செய்திருக்கிறது. எனவே 43.5 கோடிகளை முதல் நாளில் வசூலித்ததால், மொத்தமாக 250 முதல் 300 கோடிகள் வரை மெர்சலுக்கு மைலேஜ் உண்டு** என்கிறார் கெயின். இது உண்மையா, இல்லையா என்பதை சீனாவிலிருந்து பார்க்கும் அவரைவிட, இங்குள்ள யதார்த்தத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.

மெர்சல் திரைப்படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பு, ஏக்கம் எல்லாவற்றையும் முதல் நாள் ஓப்பனிங் தீர்த்துவிட்டது. அதையடுத்து பாஜக சார்பில் மெர்சலுக்கு இலவச விளம்பரம் கொடுக்கப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால், அந்த அதிவேக உந்துதல் நேராக மெர்சல் படத்துக்குப் போய்ச் சேரவில்லை. மெர்சல் திரைப்படம் தடை செய்யப்படும் என உறுதியாக நம்பிய விஜய் ரசிகர்கள், அப்போது இணையத்தில் பரபரப்பாகக் கைமாற்றப்பட்டுக்கொண்டிருந்த மெர்சல் படத்தின் பைரேட்டட் டோரன்ட் பிரின்ட்டிலிருந்து மெர்சல் திரைப்படத்தின் பாகங்களை வெட்டி வெட்டி வெளியிட்டுவிட்டனர். படத்தைத் தடை பண்ணா நாங்க படம் போட்டுக் காட்டுவோம் என்று பகிர்ந்ததால் மெர்சல் சர்ச்சைகள் முடிந்த பிறகு படத்தின் வசூல் கணிசமான அளவு அடி வாங்கியிருக்கிறது.

முதல் நாளில் 43.5 கோடிகள் வசூலித்த திரைப்படம் அடுத்த நான்கு நாள்களில் (கடந்த வார இறுதியையும் சேர்த்து) 86.5 கோடிகள் மட்டுமே வசூலித்திருக்கிறது கெயின் கணக்குப்படி. எனவே, ஏற்கெனவே தியேட்டரிலும், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களையும் பார்த்தவர்கள் மெர்சல் திரைப்படத்தை மீண்டும் தியேட்டருக்குச் சென்று பார்ப்பார்களா என்றும், தற்போது மாத இறுதியில் இருக்கிறோம் என்பதையும், மக்கள் ஏற்கெனவே தீபாவளிக்கு செலவழித்துவிட்டு உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துப் பார்த்தால் 200 கோடிக்கு மீதமிருக்கும் 70 கோடிகளை வசூல் செய்யவே மெர்சல் திரைப்படம் சிரமப்பட வேண்டும்.

அத்துடன் கெயின் குறிப்பிட்டிருக்கும் திரைப்படங்கள் நான்கும் தமிழில் மட்டும் எடுக்கப்பட்டவை அல்ல. கபாலி முதல் ஐ திரைப்படம் வரை பல மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டவை. ஆனால், மெர்சல் படத்தின் நிலை என்னவென்று பார்க்க வேண்டுமல்லவா. தீபாவளியன்றே தமிழில் ரிலீஸானது போலவே, தெலுங்கிலும் அதிரிந்தி என்ற பெயரில் டப் செய்து ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், தமிழுக்கே சென்சார் கிடைக்காமல் போனதால், தெலுங்கில் ஒரு வாரம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி இன்று ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 400 ஸ்கிரீனிலும், வட அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் ரிலீஸாகவிருந்தது அதிரிந்தி. நேற்று (அக்டோபர் 26) காலை அதிரிந்தி படத்துக்கு U/A சர்டிஃபிகேட் கிடைத்துவிட்டதாக வெளியான தகவலும் அதையே உறுதி செய்தது. ஆனால், நேற்று இரவு தேனாண்டாள் நிறுவனத்தின் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் அதிதி ரவிச்சந்திரன் ட்விட்டரில் **அதிரிந்தி நாளை ரிலீஸாகவில்லை. ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்** என்று கூறினார்.

தமிழில் ஏற்பட்டது போலவே தெலுங்கிலும் ஜி.எஸ்.டி. பற்றிய வசனங்களை நீக்கச் சொல்லி பிரச்சினை நடைபெற்றுவருவதாகத் தெரிகிறது. தமிழக சென்சார் போர்டு அனுமதித்ததைப் போல, தெலுங்கில் ஜி.எஸ்.டி. வசனங்களை அனுமதிக்கக் கூடாது என சென்சார் போர்டுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தமே அதிரிந்தி ரிலீஸ் தள்ளிப்போனதற்குக் காரணம் என ஆந்திரா மீடியா முழுக்கப் பேசப்படுகிறது. தமிழக மீடியாக்களில் ஜி.எஸ்.டி. – டிஜிட்டல் இந்தியா பற்றிய வசனங்கள் தெலுங்குப் பதிப்பில் நீக்கப்பட்டுவிட்டதாகவே செய்திகள் வெளியாகத் தொடங்கிவிட்டன. கேரளாவில் இந்த வாரம் வரிசையாகப் படங்கள் ரிலீஸாகத் தொடங்கிவிட்டன. தீபாவளி அன்று தமிழகத்தில் ரிலீஸானதுபோல கர்நாடகத்திலும் ரிலீஸானபோது, விஜய்யின் படம் கர்நாடகாவில் ரிலீஸாகக் கூடாது என்று கன்னட அமைப்புகளால் பிரச்சினை செய்யப்பட்டது. தமிழகத்திலேயே மெர்சலின் நிலை மோசமானதாக இருந்ததால், தமிழக அரசியல்வாதிகளில் பலர் அந்த சம்பவங்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வைகோ மட்டும் கன்னட அமைப்புகளுக்குக் கண்டனம் தெரிவித்தார். எனவே, தெலுங்கில் ரிலீஸாகப் போகும் ஐந்நூறு தியேட்டர்கள் மட்டுமே தற்போதைக்கு மெர்சலுக்குக் கிடைக்கும் தற்காலிக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்.

மெர்சல் திரைப்படம் எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டாலும் தமிழ் – தெலுங்கு ரசிகர்கள் மட்டுமே இனி பார்ப்பார்கள் என்பதால் மற்ற நாடுகளில் அடுத்த வாரமே ஸ்கிரீன்களை இழக்க நேரிடும். எனவே, மெர்சல் 200 கோடியைத் தாண்டுமா என்ற விவாதத்தை நடத்துவதே ஆரோக்கியமானது. படம் எதைப் பேசினாலும், படத்தை வாங்கி விநியோகம் செய்பவர்களுக்கும், தியேட்டரில் திரையிடுபவர்களுக்கும் படம் என்பது கடைசியில் Nothing Personal; Just Business அல்லவா?�,”

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts