உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் வடிவில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
அயோத்தி நகரில் ரூ. 200 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா நேற்று(பிப்ரவரி 20) அடிக்கல் நாட்டினார். ரூ. 80 கோடி மதிப்பிலான அயோத்தி ரயில் நிலைய மறுகட்டமைப்புத் திட்டமும் இதில் அடங்கும்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “இங்குள்ள பழைய ரயில் நிலையத்தை இடித்துவிட்டுப் புதிய ரயில் நிலையம் கட்டப்படவுள்ளது. அந்த ரயில் நிலையத்தை அயோத்தி நகரிலுள்ள ராமர் கோயில் போன்று கட்டத் திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக மத்திய அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையம் 1980களில் விஸ்வ இந்து பரிஷத் அமைத்துக்கொடுத்த ராமர் கோயில் வடிவமைப்பினைப் போல் இருக்கும். அயோத்தியை ரயில் மூலம் இந்தியாவின் பிற பகுதிகளோடு இணைக்க வேண்டும் என்பது அரசின் விருப்பம். அப்போதுதான் ராம பக்தர்கள் இங்கு வர எளிதாக இருக்கும். இந்தத் திட்டம் 2021ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
அப்போது உடன் இருந்த பாஜக எம்.பி வினய் கட்டியார், “அயோத்தி ரயில் நிலையத்தைப் புதுப்பிக்கும் திட்டம் என்பது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலேயே ஆலோசிக்கப்பட்டது. இந்த ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டவுடன், ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும்” என்று குறிப்பிட்டார்.
அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவருகிறது. இந்த வழக்கை நிலப் பிரச்சினை வழக்காக மட்டுமே அணுகுவோம் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.�,