_மிஸ்டர் சந்திரமௌலி: திரை விமர்சனம்!

public

வர்த்தகப் போட்டியில் விரியும் மரண வலை

வாடகைக் கார் நிறுவனங்களான கருடா கேப், கோ கேப் ஆகியவற்றுக்கிடையே நடக்கும் கார்ப்பரேட் தொழில் போட்டியில் மாட்டிக்கொள்கிறது சந்திரமௌலி (கார்த்திக்) குடும்பம். அதில் இழந்தது, பெற்றது, நட்பு, அப்பா – மகன் பாசம், காதல், துரோகம் என அனைத்து அம்சங்களையும் கொண்ட படம் மிஸ்டர் சந்திரமௌலி.

படத்தின் தலைப்பு முடிந்ததும் திரையில் விரிகிறது மருத்துவமனைக் காட்சி. நோயாளியைவிடப் பதற்றத்துடன் இருக்கும் மருத்துவர்கள். நீங்க ஆஸ்பத்திரியில் இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். பின் நோயாளியிடம் கண்ணாடி கொடுத்து முகத்தைப் பார்க்கச் சொல்கிறார்கள், அந்த முகம் ராகவ் (கௌதம் கார்த்திக்). உங்களுக்கு அடிபட்டதால் 2 அடிக்கு மேல் கண் தெரியாது என்று அதிர்ச்சி கொடுக்கிறார்கள். அதிலிருந்து ஃப்ளாஷ்பேக் தொடங்குகிறது.

அழகான குடும்பமாக அறிமுகமாகிறது சந்திரமௌலி (கார்த்திக்) குடும்பம். அம்மா இல்லாத குறை தெரியாமல் தனது மகன் ராகவ்வைச் சிறந்த குத்துச்சண்டைவீரனாக வளர்க்கிறார் சந்திரமௌலி. அவர்கள் வீட்டில் பழைய பொருட்கள் அதிகம். பழைய பத்மினி கார் மீது அளவு கடந்த காதல் சந்திரமௌலிக்கு. பத்மினியால் ஒரு சிறிய விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தினால் ராகவ்வுக்குக் காதல் மலர்கிறது.

இது ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க, மற்றொருபக்கம் ‘கோ’ கேப்பில் செல்லும் பயனாளிகள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். சந்திரமௌலி விபத்தில் இறந்து போகிறார்.

ஃப்ளாஷ்பேக் இதோடு முடிய, மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வரும் ராகவிடம், பைரவி என்ற பெண்ணின் இறப்புச் சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. அதில் சந்திரமௌலி கையெழுத்து இருக்கிறது. யார் இந்த பைரவி (வரலட்சுமி) என்ற தேடலுடன் செல்லும்போது பல பதில்கள் கிடைக்கின்றன. தன் தந்தை கொலை செய்யப்பட்டது தெரிகிறது. அந்தக் கொலைக்குக் காரணம் யார் என்ற கேள்வியோடு பழிவாங்கும் படலமாக அமைகிறது படத்தின் மீதிக் கதை.

திரைக்கதையை நான் லீனியராக அமைத்திருக்கிறார் இயக்குநர் திரு. நான் லீனியர் என்பது கதையின் தேவைக்கான அம்சமாக அல்லாமல் சுவாரஸ்யம் கூட்டும் உத்தியாகவே பயன்பட்டிருக்கிறது. கதையின் நகர்வுகளை முன்பின்னாக அமைத்திருப்பதில் ஓரளவு சுவாரஸ்யம் கூடியிருக்கிறது என்பதில் மறுப்பில்லை. ஆனால், படத்தின் பல்வேறு அம்சங்கள் ஒன்றுடன் ஒன்று இணையாமல் உதிரிகளாக நிற்பதால், படத்தின் தாக்கம் குறைகிறது. பிரதான கதைப் பயணத்துக்கு இணையாகப் பல இழைகள் வருகின்றன. ஆனால், அவை கதைக்குத் துணை செய்வதற்குப் பதில் கதையின் குவிமையத்தைக் கலைக்கவே அதிகம் பயன்பட்டிருக்கின்றன. விளைவாக, இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.

அப்பா – மகன் பாசம் அழுத்தமாகவும் அழகாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. மகனின் காதலியுடன் அப்பா ஃப்ரெண்ட்லியாகப் பழகுவது, அவர்களுடன் பார்ட்டிக்குப் போய் ஆடுவது எனத் தன் மகனோடு அப்பா எந்த அளவு சுதந்திரமாக, நட்பாகப் பழகுகிறார் என்பதைக் காட்டியிருக்கிறார்கள். லிவிங் டுகெதர் வாழ்க்கையின் சித்திரிப்பும் படத்தில் உள்ளது. வரலட்சுமிக்குச் சிறப்பான பாத்திரம். அவருக்கும் கார்த்திக்கிற்கும் இடையிலான உறவு எம்மாதிரியானது என்று வரையறுக்காமலேயே செல்வது இயக்குநரின் புத்திசாலித்தனம். அந்தக் காட்சிகளில் பழைய கார்த்திக் கண்முன் வந்து செல்கிறார். இருந்தாலும் வரலட்சுமி கதாபாத்திரம் இந்தப் படத்திற்குத் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது.

‘மொபைலா’, ‘சாணக்யா’, ‘அர்ஜுனா அர்ஜுனா…’ முதலான கவர்ச்சிப் பாடல்களின் காலம் எல்லாம் முடிந்து, கதைதான் முக்கியம் என்கிற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். இந்தச் சமயத்தில், ‘ஏதேதோ ஆனேனே’ என்ற பாடலைப் படத்தில் சேர்த்திருப்பதுடன் இந்தப் பாடலின் காட்சிகளையே புரமோஷனுக்கும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

படம் மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் அதிகமாக வாடகைக் காரில் செல்கிறார்கள். படத்தில் காட்டியதுபோல் நடந்துவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்குத் தோன்றக்கூடும். கார்ப்பரேட் உலக முதலைகளின் பசிக்கு நாம் இரையாகிவிடக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர். என்றாலும், அதற்குத் தீர்வு என்ன என்கிற கேள்வியைப் படம் எதிர்கொள்ளவில்லை.

இறுதி 45 நிமிடத் திரைக்கதையை மிகவும் விறுவிறுப்பாக்கியிருக்கிறார் இயக்குநர். இரண்டு அடிக்கு மேல் தெரியாத கண்களை வைத்துக்கொண்டு கௌதம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விறுவிறுப்பாகவும் ஓரளவு நம்பகத்தன்மையுடனும் காட்டியிருக்கிறார்.

கௌதம் கார்த்திக், தன்னுடைய அப்பாவிடமிருந்து நிறைய நடிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும். இருந்தாலும் வலுவான நடிப்பை வழங்க ஒரு சில இடங்களில் முயற்சி செய்திருக்கிறார். ரெஜினா கஸாண்ட்ரா படத்தின் புரமோஷனுக்கு நன்கு பயன்பட்டிருக்கிறார். மகேந்திரன், அகத்தியன், சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, சதீஷ் தங்களது கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்துகிறார்கள். குறிப்பாக, மகேந்திரனும் கோபியும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இசை சாம் சிஎஸ். பாடல்களுக்கான இசை பிரமாதம். பின்னணி இசையில் ஒரு சில இடங்களில் இரைச்சலாகவே இருக்கிறது. ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு சிறப்பு.

இன்றைய கார்ப்பரேட் உலகில் சம்பந்தமே இல்லாமல் நாம் எப்படிச் சிக்கியுள்ளோம், நமக்கான பாதிப்புகள் எந்த வடிவில் வருகின்றன என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் திரு, திரைக்கதையை மேலும் தெளிவாக வடிவமைத்திருந்தால் படத்தின் தாக்கம் அழுத்தமாக இருந்திருக்கும்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *