ஐநா பாதுகாப்பு குழுவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு நேற்று சீனா முட்டுக்கட்டை போட்டது. இதுவரையில் இவ்விவகாரத்தில் நான்காவது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. சீனாவின் செயல் ஏமாற்றமளிப்பதாக இந்திய தரப்பு தெரிவித்தது. இந்நிலையில், சீனாவின் செயலுக்கு ஐநா பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டால் ஐநா பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மாற்று வழிகளை பரிசீலிக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதையடுத்து மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு அமெரிக்கா உட்பட முக்கிய உறுப்பினர்கள் ஐநா பாதுகாப்பு குழுவில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரவுள்ளன. எனினும், ஐநாவின் 1267 தடைக் குழுவின் கீழ் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்தால் அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்படுவதோடு அவரது சொத்துகளும் முடக்கப்பட்டிருக்கும். அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்தாலும், பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினராக இருப்பதால் சீனாவால் அந்த தீர்மானத்தையும் தடுக்க முடியும்.
இதே போக்கை சீனா தொடர்ந்தால் பாதுகாப்பு குழுவில் வேறு நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.�,