கடந்த மக்களவைத் தேர்தலைவிட, தற்போதைய தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கு 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக இடமளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
நாளை (ஏப்ரல் 18) நடைபெறும் இரண்டாவது கட்ட மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 10 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. விதர்பா, மராத்வாடா பகுதிகளில் இத்தொகுதிகள் அமைந்துள்ளன. இந்த தேர்தலை முன்னிட்டு நந்தெத், லாடூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
லாடூர் பேரணியில் பேசிய மோடி, காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் வாரிசு அரசியலைப் பேணிப் பாதுகாப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார். “தேசிய முற்போக்குக் கூட்டணி நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் ஒரு குடும்பத்துக்காகப் பணியாற்றுகின்றன. இது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது” என்று குறிப்பிட்டார்.
ஆனால், மோடியின் பேச்சுக்கு மாறாகவே புள்ளிவிவரங்கள் அமைந்துள்ளன. 2014 மக்களவைத் தேர்தலில் 54 சதவிகிதம் அரசியல் வாரிசுகள் வேட்பாளர்களாக இருந்தனர். இந்த தேர்தலில், மொத்தமுள்ள 48 தொகுதிகளில் 37 வேட்பாளர்கள் அரசியல் வாரிசுகள். இது 77 சதவிகிதம் ஆகும்.
கட்சிகளைப் பொறுத்தவரை, தேசியவாத காங்கிரஸ் 62 சதவிகிதம் வாரிசுகளை நிறுத்தியுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பாஜக உள்ளது. அக்கட்சியில் 40 சதவிகிதம் வேட்பாளர்கள் அரசியல் வாரிசுகள். சிவசேனாவில் 30 சதவிகிதமும், காங்கிரஸில் 26 சதவிகிதமும் வாரிசு வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இது பற்றி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா புலே பேசுகையில், தற்போது இந்தியாவிலுள்ள எந்தக் கட்சியும் வாரிசு அரசியலுக்கு விதிவிலக்கல்ல என்று கூறினார்.
பாஜகவில் பூனம் மகாஜன், பிரீத்தி முண்டே, சுஜய் விகே பாட்டீல் உள்ளிட்டவர்கள் அரசியல்வாதிகளின் வாரிசுகள்தான். “எனது தந்தை போட்டியிட்ட தொகுதியில் போட்டியிடாமல், வேறு தொகுதியில் போட்டியிட எனக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது” என்கிறார் மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம்.
“அரசியல் வாரிசு என்றால் உங்களுக்கு உடனடி வாய்ப்பு கிடைக்கும். ஆனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதும் முக்கியம். உங்களது குடும்பத்தின் நல்ல பெயரையும் கெட்ட பெயரையும் மரபுரிமையாக அனுபவிப்பீர்கள்” என்கிறார் மிலிந்த் தியோரா. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் முரளி தியோராவின் மகனான இவருக்கு 27 வயதிலேயே முதல் வாய்ப்பு கிடைத்தது. கடந்த மக்களவைத் தேர்தலில் தோற்றாலும், தற்போது 4ஆவது முறையாக இவர் தேர்தல் களத்தில் உள்ளார்.�,