_போலீஸ் என்று கூறி 98 லட்சம் திருட்டு!

Published On:

| By Balaji

போலீசார் என்று கூறி பேருந்தில் இருந்த பயணியை அழைத்துச் சென்ற மர்ம நபர்கள், அவரிடம் இருந்து 98 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்தனர்.

சென்னை ஏழுகிணறு பெரியண்ணன் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத். கடந்த 9ஆம் தேதியன்று 98 லட்சம் ரூபாயுடன் இவர் சென்னையில் இருந்து திருச்சி செல்லத் திட்டமிட்டிருந்தார். பாரிமுனையில் இருந்து கோயம்பேடு நோக்கிச் செல்வதற்காக மாநகரப் பேருந்தில் ஏறினார். கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் திடீரென்று 4 பேர் அந்த பேருந்தை வழிமறித்தனர். போலீசார் என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த நபர்கள், கோபிநாத் அருகே சென்றனர். அவரிடம் கஞ்சா இருப்பதாகச் சந்தேகம் உள்ளது என்று தெரிவித்தவர்கள், அவரைப் பேருந்தில் இருந்து கீழே இறக்கினர். அவர்களது கையில் கைதிகளுக்கு இடும் கைவிலங்கு இருந்தது.

அதன்பின், கோபிநாத்தை அந்த நபர்கள் காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். செல்லும் வழியில், அவரைத் தாக்கிவிட்டு 98 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர். இதையடுத்து, அவர் உடனடியாகத் திருச்சியில் வசிக்கும் தனது உறவினர் கண்ணனிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விஷயத்தைத் தெரிவித்தார். இது பற்றி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், கோபிநாத் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர் போலீசார்.

கண்ணன் சார்பாக சென்னை பர்மா பஜார் கடைகளில் இருந்து பணத்தை வாங்கி, அதனைத் திருச்சியில் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் கோபிநாத். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு அவர் பணம் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், எப்போதும் அவருடன் துணைக்கு வரும் நபர் ஒருவர் சம்பவம் நடந்த அன்று வரவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றியும், அந்த பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்தும் போலீசாரின் விசாரணை தொடர்ந்து வருகிறது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share