நமக்குள் தேடுவோம் 6 – ஆசிஃபா
இரண்டு வாரங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன், ஒரு பெண் அணிந்திருந்த ஆடையைப் பார்த்து, பொது இடத்தில் வைத்து அவளைத் தவறாகப் பேசிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதற்கான எதிர்வினைகளும் பலமாக இருந்தன. ஆனால், யோசித்துப்பார்க்கையில் நாம் அனைவருமே ஒரு வகையில் அப்படித்தான் நடந்துகொள்கிறோமோ என்று தோன்றியது.
“Fifty Shades of Grey வாசிக்கிறாள், கண்டிப்பாக அவள் அப்படித்தான்!”, “நைட் டெய்லி ஆன்லைன்ல இருக்கா, எந்த மாதிரி பொண்ணு இவ?”, “ரோட்ல ஃபோன் பேசிட்டே போறான் தம்பி, இவன் அம்மாகிட்ட சொல்லணும்”, என்பது முதல், சொல்லவே முடியாத அளவிற்கு நாமும் நம் அம்மா, அப்பா உட்பட நம்மைச் சுற்றி இருப்பவர்களும், வெவ்வேறு நிலைகளில் ஜட்ஜ்மெண்டலாகவே இருக்கிறோம்.
விளையாட்டாக நாம் பேசும் பல விஷயங்களும் குறிப்பிட்ட முன்முடிவுடன் நாம் பேசுவதாகவே இருக்கின்றன. சில நேரங்களில் இது நமக்கே தெரிவதில்லை. அந்த அளவிற்கு நமக்குள் ஜட்ஜ்மெண்டல் எண்ணங்கள் வேரூன்றிக் கிடக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம், நாம் வளர்ந்த, வாழும் சூழ்நிலைதான். எப்போதுமே பிறரைப் பற்றி எதாவது பேசிக்கொண்டிருக்கும் சூழலில் வளர்கிறவர்களுக்குப் பிறரைப் பற்றிப் பேசுவது தவறு என்றே தெரிவதற்கு வெகு நாட்கள் ஆகிறது. பலரும் அப்படித் தெரிந்துகொள்வதுகூடக் கிடையாது.
பிறரைப் பற்றி பேசுவது என்று சொல்லும்போது, நமக்குத் தெரிந்த சில விஷயங்களை வைத்துக்கொண்டு, பிறரின் குணங்களை, நடத்தையை விமர்சிப்பது, மதிப்பிடுவது ஆகியவற்றைத்தான் குறிப்பிடுகிறேன்.
இப்படி ஜட்ஜ்மெண்டலாக இருப்பதற்கு என்ன காரணம்? நாம் வாழும் சமூகத்தில் நாம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக நாம் ஜட்ஜ்மெண்டலாக இருக்கிறோம். சரி, தவறு என்பதற்கு அப்பாற்பட்டுச் சுற்றத்துடன் பொருந்திப்போவதற்கான மிக எளிமையான வழி, அவர்கள் எது சொன்னாலும் ஒத்துப்போவது; அவர்களைப் போலவே பேசுவது.
இன்னொரு காரணம், நாம் நல்லவர், நியாயமானவர், ஒழுக்கமானவர் என்பதை நிரூபிக்க, மற்றவர்களைப் பற்றி மாற்றுக் கருத்துச் சொல்வது. இதுதான் பெரும்பாலும் நடப்பது. நாம் அப்படிக் கிடையாது என்பதை நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் வழியாகவும் இது இருக்கிறது. அநேகமாக, ‘ஒழுக்கம்’ என்ற விஷயத்தில்தான் அதிகமான ஜட்ஜ்மெண்டல் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ‘அப்படி இருக்காத, இப்படி இருக்காத’, ‘பாக்கறவங்க என்ன நினைப்பாங்க’ என்று சொல்கிறோம்.
உண்மையில், பாக்கிறவர்கள் ஒன்றுமே நினைக்க மாட்டார்கள். நாம் நினைப்பதை எல்லாம் பிறர் மீது திணித்து, அவர் நினைத்துவிடக்கூடும் என்று சொல்கிறோம்.
இன்னும் தெளிவாகச் சொன்னால், நம் மனதில் உள்ள, நம்முடைய குணத்தின் அல்லது எண்ணங்களின் வெளிப்பாடாகவே நம்முடைய ஜட்ஜ்மெண்டல் எண்ணங்கள் இருக்கின்றன. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே பிறரையும் நினைக்கிறேன். கண்ணாடிபோல. பிறரிடமும் நாம் நம்மையே பார்க்கிறோம். பொறாமை, இன்செக்யூரிட்டி போன்றவை நமக்கு இருந்தால், நிச்சயமாக நாம் ஜட்ஜ்மெண்டலாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், நம்முடைய பயத்தையும், பொறாமையையும், இன்செக்யூரிட்டியையும் மறைப்பதற்காகப் பிறரைப் பற்றி எதாவது சொல்ல முனைகிறோம்.
இதில் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள்:
1. ஒருவர் செய்யும் இந்தச் செயல் தவறானது என்று சொல்லத் தொடங்கும் நாம், சிறிது காலத்தில், ‘இப்படிச் செய்யும் ஒருவரின் குணம் / ஒழுக்கம் இப்படித்தான் இருக்கும்’ என்று சொல்லத் தொடங்குகிறோம்.
2. ஒருவரின் செயல் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரியத் தொடங்குகிறது. அவரின் சூழல், அதைச் செய்த காரணம் என்று வேறு எதுவுமே தெரியாமல் போய்விடுகிறது.
நம்முடைய சுதந்திரம் என்பது, பிறரின் மூக்கு நுனி வரை மட்டுமே என்று சொல்வார்கள். ஒருவரைப் பற்றிப் பின்னால் பேசுவதே தவறு; அதுவும் முன்முடிவுகளுடன் பேசுவது நமக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்.
பிறரைப் பற்றி யோசிக்கும் நேரத்தில், சிறிது நேரத்தை நம்மைப் பரிசீலனை செய்ய ஒதுக்குவது நல்லது.
[எதுக்கெடுத்தாலும் கோபம் வருகிறதா?](https://minnambalam.com/k/2019/05/24/14)
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!](https://minnambalam.com/k/2019/05/24/93)
**
.
**
[ஓ.பன்னீரின் ‘பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/25/30)
**
.
**
[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)
**
.
**
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
.
�,”