நடிகர் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இரண்டாவது முறையாக இணையும் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சீமராஜா திரைப்பட வெளியீட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு புறம் ரவிக்குமார் இயக்கும் அறிவியல் புனைவுக்கதையைக் கொண்ட படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நயன்தாராவைப் பொறுத்தவரை கோலமாவு கோகிலா ரிலீசுக்குத் தயாராக உள்ளது. அதுபோக கொலையுதிர்க் காலம், இமைக்கா நொடிகள், விசுவாசம் மற்றும் தெலுங்கில் சைரா நரசிம்மா ரெட்டி என்று பிசியாக இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தனது ட்விட்டரில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். சிவகார்த்திகேயன், ராஜேஷ், நயன்தாரா மற்றும் சதீஷுக்கு வாழ்த்து தெரிவித்து ஆர்.டி.ராஜா ட்வீட்டும் செய்துள்ளார்.
இத்திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் வேலைக்காரன் படத்திற்கு பிறகு மீண்டும் இதில் இணைகின்றனர். சிவகார்த்திகேயன் இயல்பிலேயே காமெடி ஜானரில் நன்றாகக் கலக்குபவர் எனும் காரணத்தால் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படமெடுக்கும் ராஜேஷ் உடனான இந்த கூட்டணி வெற்றிபெற வாய்ப்புள்ளது.
அதேநேரம் ராஜேஷ் கடைசியாக இயக்கியிருந்த சில படங்கள் சரியாகப் போகவில்லை. அத்துடன் குடி, லவ் ஃபெயிலியர் இவற்றைத் தாண்டி அவரது பெரும்பாலான படங்களின் கதைகள் அமைக்கப்படுவதே இல்லை எனும் குற்றச்சாட்டும் ரசிகர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. எனவே, முந்தைய படங்களின் தோல்விகளிலிருந்து கற்ற பாடத்தால் இந்த முறை வெற்றிப்படமாக்கும் நோக்கில் இந்தப் படத்தினுடைய திரைக்கதைத் தேர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,