பாரதிய ஜனதா கட்சி நமோ டிவி தொடங்கியிருப்பது தேர்தல் விதி மீறலாகும் என்று ஆம் ஆத்மி கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
நமோ டிவி என்ற தொலைக்காட்சியைப் பாரதிய ஜனதா கட்சி மார்ச் 27ஆம் தேதி தொடங்கியது. மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் சமூகநலத் திட்டங்கள் குறித்து விளம்பரம் செய்யும் வகையில் இத்தொலைக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. ஏர்டெல், டாடா ஸ்கை, டிஷ் டிவி, டி2ஹெச் போன்ற பல முன்னணி டிடிஹெச் சேவை நிறுவனங்களில் இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கான விளம்பர அறிவிப்புகள் பல்வேறு தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் வெளியானது. இந்தத் தொலைக்காட்சியானது இலவசமாக ஒளிபரப்பப்படுகிறது. இதற்காக மாதாந்திர தொகை எதுவும் செலுத்த தேவையில்லை.
“நாங்கள் இந்த நாளை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான சவ்கிதார்களுடன் (காவலாளிகளுடன்) மாலை 5.00 மணிக்கு உரையாடவுள்ளேன். இந்த உரையாடலைக் காணத்தவறாதீர்கள். நமோஆப்பிலும், நமோ டிவியிலும் நேரடி ஒளிபரப்பாகும்” என்று மார்ச் 31ஆம் தேதி பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நமோ தொலைக்காட்சியைக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். எனவே, தேர்தல் நோக்கத்துக்காகத்தான் இந்தத் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது என்று பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
ஆம் ஆத்மி கட்சி நேற்று இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. “தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது பாரதிய ஜனதா கட்சி தொலைக்காட்சி தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதா? இது தேர்தல் நடத்தை விதி மீறல் இல்லையா? தொலைக்காட்சி தொடங்க பாஜக அனுமதி பெறவில்லை என்றால் அதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என்று தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஆம் ஆத்மி கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.�,