நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கும் எனத் தெரிவித்துள்ள திருமாவளவன், மூன்றாவது அணிக்கான தேவை தற்போது எழவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று (ஜூலை 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், “எட்டு வழிச் சாலை என்பது மக்கள்மீது வலிந்து திணிக்கப்படுகிறது. மக்களிடம் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில் கருத்துக்கேட்பு என்ற பெயரால் தமிழக அரசு மாவட்ட ஆட்சியாளரை வைத்து கூட்டம் நடத்துகிறது. ஆயிரம் ஏக்கருக்கு மேலாக வனங்களை அழிக்கிற வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. திட்டத்தை எதிர்ப்பவர்கள்மீது அரசு அடக்குமுறையை ஏவுகிறது. இதற்குக் கண்டனம் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதேபோன்ற ஆர்ப்பாட்டத்தை 20ஆம் தேதி சேலத்திலும் நடத்துவோம்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “வருமான வரித் துறையினர் சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள் என்று கூற முடியாது. மத்தியில் ஆட்சியில் இருப்போருக்கு வேண்டாதவர்கள் மீது வருமான வரித் துறை சோதனை நடத்துவது வாடிக்கையானதுதான். மத்திய அரசுக்கும் எடப்பாடி அரசுக்கும் இணக்கம் இல்லை என்பது இந்தச் சோதனை மூலம் தெரியவருகிறது. இந்தச் சோதனை மூலம் ஒன்று எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்றலாம் அல்லது ஆட்சியைக் கலைக்கலாம் என்று மத்திய அரசு எண்ணுகிறது. தமிழக அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய ஆட்சியாளர்கள் செயல்படுவது வேதனை தருகிறது.
எட்டு வழிச் சாலையை ரஜினிகாந்த் ஆதரிப்பது அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக அவர் பேசி வருகிறார். வலதுசாரி சிந்தனையாளர் என்பதை அவர் உறுதிப்படுத்தி வருகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான தோழமை கட்சிகளுடன்தான் விடுதலைச் சிறுத்தைகள் இயங்கும். திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், தடுமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் முயற்சி செய்கின்றனர். குறிப்பாகப் பாட்டாளி மக்கள் கட்சி பேசி வருகிறது. மூன்றாவது அணியில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தற்போது மூன்றாவது அணிக்கான அவசியம் இல்லை” என்றும் தெரிவித்தார்.�,