_ஜாகிர் நாயக் பேச மலேசியாவிலும் தடை!

Published On:

| By Balaji

பண மோசடி வழக்குகளின் பேரில் இந்தியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ள, இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக், இப்போது மலேசியாவிலும் சர்ச்சைக்குளாகியிருக்கிறார். அங்கே மத உரைகள் நிகழ்த்த ஜாகிருக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மலேசியாவில் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும் என்று மலேசிய அரசின் ஏழு அமைச்சர்கள் வலியுறுத்திய நிலையில், தான் தெரிவித்த கருத்துக்காக மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார் ஜாகிர் நாயக்.

பண மோசடிப் புகார்கள் மற்றும் வெறுப்புப் பேச்சு புகார்களுக்கு ஆளான ஜாகிர் நாயக் இந்த மாதத் துவக்கத்தில் மலேசியாவில் ஒரு சொற்பொழிவின்போது, “மலேசியாவில் இருக்கும் சிறுபான்மையினரான இந்துக்கள், இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினரான முஸ்லிம்களை விட 100 மடங்கு அதிக உரிமைகளோடு வாழ்கின்றனர்” என்றும், ‘சீன மக்கள் மலேசிய நாட்டின் விருந்தினர்களாகவே நடத்தப்படுகிறார்கள்” என்றும் பேசியிருக்கிறார் ஜாகிர் நாயக்.

இந்தக் கருத்து மலேசிய நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மலேசிய அரசுக்கு பல புகார்கள் சென்ற நிலையில் மலேசிய போலீஸார் நேற்று (ஆகஸ்டு 19) ஜாகிர் நாயக்கிடம் 10 மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் விசாரணை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்குப் பின், மலேசிய போலீஸ் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவரான டாடுக் அஸ்மாவதி அஹ்மத் மலாய் மெயில் என்ற பத்திரிகைக்கு அளித்துள்ள பதிலில், “மத போதகர் ஜாகிர் நாயக்கின் சொற்பொழிவுகளுக்கு மலேசிய நாட்டில் தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து மலேசிய போலீஸின் அனைத்து பகுதி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலேசியாவில் நிலவும் மத நல்லிணக்கத்தை தொடர்ந்து பராமரிக்கவும், மலேசிய நாட்டின் பாதுகாப்பு கருதியும் இந்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார் அந்த போலீஸ் உயரதிகாரி.

இதன்படி மலேசிய நாட்டின் மாகாணங்களான மெல்கா, ஜோஹாட், சேலங்கர், பினாங்கு, கேடா, பெர்லிஸ், சரவாக் ஆகியவற்றில் ஜாகிர் நாயக்கின் பொதுச் சொற்பொழிவுகள் உடனடியாக தடை செய்யப்பட்ட்டிருக்கின்றன.

இந்த சர்ச்சை குறித்து மலேசிய பிரதமர் டாக்டர் மஹாதிர் முகமது கடந்த ஞாயிறன்று இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ஜாகிர் நாயக்கிற்கு மலேசிய அரசு நிரந்தக் குடியுரிமை வழங்கியிருக்கிறது. மலேசிய அரசின் இந்த செயலுக்கு துரோகம் செய்வது அவரது பேச்சுகள் இருப்பது கண்டிக்கத் தக்கது. அவர் இஸ்லாமை பற்றிப் பேசலாம், ஆனால் மலேசியாவின் மத நல்லிணக்கத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே இன்று (ஆகஸ்டு 20) ஜாகிர் நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் பேச்சு தவறாக சித்திரிக்கப்பட்டு, தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எனினும் என் மீதான இந்த புரிதலுக்காக மலேசிய மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் என்றுமே குரான் வழியில் உலகம் எங்கும் அமைதியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறவன். அமைதிக்காகவே பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் என்னுடைய இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்பதற்காகவே என்னை விமர்சிக்கிறவர்களையும் நான் எதிர்கொண்டாக வேண்டியுள்ளது. என் மீது புகார் சொல்பவர்கள், என் மீதான புகார்களை நம்புகிறவர்கள் தயவு செய்து என் பேச்சை முழுமையாகக் கேளுங்கள்.

குறிப்பிட்ட சில வாக்கியங்களை மட்டும் வெட்டி எடுத்து வைத்துக் கொண்டு என் மீது தவறான கருத்துருவாக்கம் செய்ய சில முற்படுகிறார்கள். மலேசிய போலீசிடம் என் நிலையை தெளிவாக எடுத்துரைத்துள்ளேன். ஆனாலும் என் பேச்சினால் மனம் புண்பட்டிருக்கும் ஒவ்வொருவரிடம் என் மன்னிப்பைக் கோருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[80 தொகுதிகளுக்குக் குறி: உருவாகும் அன்புமணியின் முப்படை!](https://minnambalam.com/k/2019/08/20/16)**

**[டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!](https://minnambalam.com/k/2019/08/19/57)**

**[புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி](https://minnambalam.com/k/2019/08/20/15)**

**[முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்](https://minnambalam.com/k/2019/08/18/44)**

**[‘சென்னை யூனியன் பிரதேசமாகலாம்: சீமான்](https://minnambalam.com/k/2019/08/20/4)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share