விவேக் கணநாதன்
அரசியல் களத்தில் சில வாரங்களுக்கு முன்புவரை அதிகம் புழங்கப்பட்ட விமர்சனம் ‘ஸ்டாலினுக்கு அரசியல் தெரியவில்லை’ என்பதாகும்.
ஸ்டாலின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றபோது, ‘இந்தியாவில் ஒரு கட்சியின் தலைவராக வருவதற்கு எல்லா விதமான தகுதியும், செல்வாக்கும் இருந்தும் மிகத் தாமதாக அதிகாரம் பெற்றவர் ஸ்டாலின்தான்’ என எழுதியது Huffington Post.
ஸ்டாலினிடம் அதிகாரம் கொடுக்கப்படாத வரையில், ‘இவ்வளவு தகுதி வாய்ந்தவருக்கு ஏன் இன்னும் உரிய அதிகாரம் கொடுக்கப்படவில்லை?’ எனப் பேசியவர்கள், அதிகாரம் கொடுக்கப்பட்ட பிறகு, ‘என்ன இவர் இப்படிச் செயல்படுகிறார்?’ எனப் பேசினர். இரண்டுக்கும் ஒரே காரணம், கருணாநிதி!
மாலைகளுக்குப் பின்னால் நிற்கும் மலை
ஸ்டாலின் மீது விழும் விமர்சனம், புகழ் மாலை இரண்டுக்கும் பின்னால் கருணாநிதி என்கிற மலை இருக்கிறது. கருணாநிதி இருந்தபோது, ஸ்டாலின் செய்தது என்பது கட்சியையும் ஆட்சியையும் முதன்மைப்படுத்திய அரசியல். இன்றைக்குச் செய்வது இயக்கத்தையும் அதிகாரத்தையும் மையப்படுத்திய அரசியல். கட்சியைவிட அதிக வரலாறு கொண்டது இயக்கம். ஆட்சியைவிடக் கூடுதல் சுமைகொண்டது அதிகாரம். அன்றைக்கு ஸ்டாலின் அவசியமாகத் தெரிய நீண்ட காலமாக அரசியலிலிருந்த கருணாநிதி மீதான விமர்சனங்கள் காரணமாக இருந்தன. இன்றைக்கு ஸ்டாலின் விமர்சிக்கப்பட மறைந்துவிட்ட கருணாநிதியின் பேராளுமை காரணமாக இருக்கிறது.
கருணாநிதியின் அரசியல் விதியாட்டங்களின் மையமாக அவர் வரித்துக்கொண்டது ‘அமைப்பை மையப்படுத்திய அரசியல்’. ஒரு தேர்தல், ஒரு கூட்டணி, ஒரு சந்தர்ப்பம், ஒரு முன்னேற்றம், ஒரு வளர்ச்சி எனத் தற்காலிக இருப்புகளின் மீது தன் விருப்பங்களைக் கட்டாமல், சமூகம் – இனம் – சித்தாந்தம் – இயக்கம் என்கிற ஒட்டுமொத்த அமைப்பின் இயக்கத்தோடு தன் அரசியல் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் கருணாநிதி. அதனால்தான் கருணாநிதி மீதான விமர்சனங்களும் இதே தளத்திலிருந்து எழுந்தன.
மொத்த சமூக அமைப்பு குறித்துக் கருணாநிதிக்கு இருந்த பிரக்ஞையால்தான், அரசியலதிகாரம் அவரிடம் கிடைத்தபோது அவர் அமைப்பைத் திருத்துபவராகவும், மாற்றங்கள் செய்பவராகவும் இருந்தார்.
கருணாநிதி வளர்ந்த காலம், உருவாகி வந்த பின்புலம், சந்தித்த அடக்குமுறைகள், நெருக்கடிகள் அவருக்கு இத்தகைய ஓர் ஆளுமையைச் சாத்தியப்படுத்தின.
இயக்கத்தில் ஸ்டாலினின் இடம் எது?
கருணாநிதிக்கு அடுத்த நிலையில் அமைப்பைப் பற்றிய புரிதல்கள் கொண்ட திராவிட இயக்கத் தலைவர்கள் என்றால் முரசொலி மாறன், ஆலடி அருணா போன்றவர்களைச் சுட்டலாம். கருணாநிதிக்கு நெருக்கமான தலைமுறையில் கிடைத்த அசல்கள் இவர்கள். இவர்களுக்கு அடுத்த தலைமுறையில் வந்த தலைவர்களில் சமூக அமைப்பு – அரசியலதிகார அமைப்பு இரண்டுக்குமான உறவில் இயங்கத் தொடங்கியவர்களில் முக்கியமானவர் மு.க.ஸ்டாலின்.
அமைப்பு மைய அரசியலை மிகக் கச்சிதமாகச் செய்யத் தெரிந்தவர் ஸ்டாலின். திமுகவின் இளைஞர் அணி கட்டமைப்பு, சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது ஸ்டாலின் செய்துகாட்டிய சாதனைகள், துணை முதலமைச்சராக இருந்தபோது அவர் ஈட்டிய புகழ் மூன்றுக்கும் காரணம், அமைப்பைச் செயல்பட வைத்தால்தான் காரியம் ஆகும்; அமைப்பை அதற்கான ஒழுங்கிசைவோடு செயல்பட வைப்பதுதான் இருப்பதிலேயே கடினமான பணி என்கிற புரிதல்.
அந்தப் புரிதல்தான், 2011 தேர்தல் தோல்விக்குப் பிறகு கோஷ்டிப் பூசல்களால் அழுகிக்கொண்டிருந்த திமுக அமைப்பைத் திருத்தும் பணிக்காக, ஊர் ஊராகச் சுற்றிக் கட்சியை வளர்க்க வேண்டிய தேவையை ஸ்டாலினுக்கு உணர்த்தியது. இன்றைக்கு அதிமுக ஆட்சியின் அத்தனை தவறுகளையும் விமர்சிக்கும்போதும், மீண்டும் மீண்டும் அதிகாரத்தை வைத்து, அமைப்பு ரீதியாக இதை எப்படிச் சரிசெய்ய வேண்டும் என்றே அவர் பேசுகிறார். நீட் தடைக்குச் சட்டம் வேண்டும் என்பதற்காகச் சட்டமன்றத்தைக் கூட்டுங்கள் எனத் திரும்பத் திரும்பச் சொன்னது முதல் ஸ்டெர்லைட் ஆலைக்குக் கொள்கை ரீதியான முடிவு கேட்டது வரை அத்தனையுமே இதன் வெளிப்பாடுதான்.
ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் போராட்ட உத்திகள் விமர்சனத்துக்கு உள்ளானபோதும், செயல்பாட்டு உத்திகள் கவனம் ஈர்த்ததுக்குக் காரணம் ஸ்டாலினின் இந்தப் புரிதல்தான்.
சீர்திருத்த அரசியலும் வளர்ச்சி அரசியலும்
பொதுவாக, திமுக போன்ற சீர்திருத்த மரபுக் கட்சிகளில் வளர்ச்சி அரசியலைப் பிரதானப்படுத்தும் தலைவர்கள் உருவாகுவது இயல்பு முரண். ஏனென்றால், நடைமுறையில் நாம் கடைப்பிடிக்கும் பொருளாதாரம் சமூக சீர்திருத்தத்துக்கும் சமூக நீதிக்கும் நேர் எதிர்த்திசையில் செயல்படுவது. ஆனால், ஸ்டாலின் அடிப்படையில் வளர்ச்சி அரசியலில் நாட்டம் கொண்டவர். ஸ்டாலினுக்கு சிங்கப்பூர் மாதிரி வளர்ச்சியில் ஈர்ப்பும் நாட்டமும் அதிகம்.
சென்னை மேயர் – தமிழ்நாடு துணை முதல்வர் எனப் பொறுப்பு வகித்த காலங்களில் அவர் ஆற்றிய பணிகள் அனைத்தும் அப்படியானவைதான். அதனால்தான் சென்னைக்குள் திமுகவின் முக்கிய வாக்கு வங்கியான பூர்வீகக் குடிகள் – குடிசைவாசிகளைப் புறநகரில் குடியேற்றுவது கட்சி நலனுக்கு நல்லதல்ல என்கிற விபரீதங்களைக் கருத்தில்கொள்ளாமல் நகரைச் சீர்படுத்தும் திட்டங்களை அவரால் செய்ய முடிந்தது. சென்னை மாநகருக்குள் திமுகவின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவுக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். ஆனால், இதன் மறுபுறத்தில் ஸ்டாலின் சென்னையின் முகத்தை மாற்றி அமைத்திருந்தார். இன்றைக்கு சாதாரணமாக சென்னைக்குள் எங்கே நின்றாலும், அது ஸ்டாலின் காலத்து மாற்றங்களோடு தொடர்புடையதாகவே இருக்கிறது.
ஸ்டாலினின் இந்த மாறுதல், வளர்ச்சி விருப்பங்களுக்கும், நடைமுறை தேசப் பொருளாதாரக் கொள்கைக்கும் உள்ள தொடர்புகள், ஸ்டாலினை திராவிடச் சித்தாந்த வெளிக்கு அப்பால் நின்று இயங்கும் ஒரு செயல்திட்டவாதியாகவே மக்கள் மனதிலும் நினைவிலும் நிறுத்தின.
ஸ்டாலின் பாஜகவோடு சென்றுவிடுவாரோ என்கிற பதற்றம், விமர்சனம், பரப்புரை இவை மூன்றுக்கும் அவரது பழைய சாதனைகள் திராவிட இயக்க அரசியல்வாதிகளின் இயல்பிலிருந்து அந்நியமானதாகப் பார்க்கப்பட்டதே காரணம்.
அன்றைக்கு ஸ்டாலின் அந்தப் பணிகள் குறித்த விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படவோ அல்லது சித்தாந்த ரீதியிலான விமர்சனங்களை எதிர்கொள்வதற்கோ தேவை ஏற்படவில்லை. காரணம், ஸ்டாலின் மீது இருந்த பிம்பம்.
‘ஜென்டில் மேன் அரசியல்வாதி’ என்பதைத் தாண்டி, வளர்ச்சி மைய அரசியல்வாதி என திராவிட இயக்கம் ஸ்டாலினை முன்னிறுத்தவில்லை. அவரும் தன்னை மக்கள் மனதில் அப்படிக் கொண்டு சேர்க்கவில்லை.
ஏனென்றால், அவர் அன்றைக்கு வேர் இல்லை. கருணாநிதி என்கிற ஆலமரத்தின் பிரதான விழுது. ஸ்டாலினின் செயல் வட்டத்திலிருந்த கருணாநிதியின் நிழலின் கருமை மங்கத் தொடங்கிய பிறகு, கருணாநிதியின் நேரடி அரசியல் ஆளுகை காலம் முடிவடைந்த உடனேயே, ஸ்டாலின் மீது இது தொடர்பான விமர்சனங்கள் வந்தன. ஆனால், ஸ்டாலின் அதற்குள் கட்சி, செல்வாக்கு இரண்டிலும் அடுத்தகட்டத்துக்கு வந்திருந்தார்.
ஐரோப்பிய தாக்கத்தின் நீட்சி!
வளர்ச்சி மைய உணர்வுகளிலிருந்து வளர்ந்துவந்த ஸ்டாலின் தன் கனவு விரிவாக்கங்களை ஐரோப்பிய தேசங்களோடு இணைத்துக்கொண்டவர்.
அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறை, விருப்பங்கள், ரசனைகள் போன்றவைகளானாலும் சரி, அரசியல் செயல் திட்டங்களாலும் சரி, அதில் ஐரோப்பியக் கருத்தாக்கத்தின் பாதிப்பு இருந்திருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு நேர் எதிர்முகமாக அவர் செயல்படத் துவங்கிய காலத்தில் அதன் முழுமையான வடிவத்தை உணர முடிந்தது.
ஜெயலலிதா நாயக பிம்ப அரசியல் செய்தபோது, ஸ்டாலின் ஐரோப்பிய பாணியிலான ‘மக்கள் நண்பன்’ அரசியலைக் கையில் எடுத்தார். தன்னை ராணியாகக் கருதிக்கொண்ட ஜெயலலிதா உப்பரிகையைவிட்டு இறங்காமல், ஹெலிகாப்டர்களில் பயணம் செய்து, பொட்டல் வெயிலில் மக்களைச் சந்தித்தபோது, ஸ்டாலின் ஆட்டோவில் ஊர் சுற்றி, சைக்கிளில் பயணம் செய்து, பேருந்துகளில் செல்ஃபி எடுத்து, தெருக்கடையில் டீ குடித்து, சமூகத்தில் செல்வாக்கு பெற்ற மனிதர்களுடன் குளிரூட்டப்பட்ட அரங்குகளில் ஆலோசனை நடத்தி ‘நமக்கு நாமே’ என்றார்.
அன்றைக்கு ‘நான் கருணாநிதியும் அல்ல, ஜெயலலிதாவும் அல்ல’ என நிரூபிக்க வேண்டிய தேவை ஸ்டாலினுக்கு இருந்தது. ஆனால், செயல் தலைவரான பிறகு, தான் யார் என நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
*ஒரு செயல் தலைவரின் விருப்பங்களுக்கு எதிரான பண்பாட்டு ஜனநாயகம்!*
இந்த வரியை, ஸ்டாலின் மீதான விமர்சனமாக எழுத வேண்டும் என்றால், பண்பாட்டு ஜனநாயகத்துக்கு எதிரான விருப்பங்கள் கொண்ட ஒரு செயல் தலைவர் என எழுதலாம்.
அமைப்பின் இயக்கத்தைப் புரிந்துகொண்டு, வளர்ச்சி அரசியல் நாட்டம் கொண்ட ஆளுமைகள் சீர்திருத்த அரசியல் கட்சிகளுக்குக் கிடைப்பது நம் ஜனநாயகத்துக்கு நற்கொடை. ஸ்டாலின் அத்தகையதொரு கொடையாக நிலைபெற வாய்ப்பிருக்கிறது. ஆனாலும், அவர் சிக்கலுக்குள்ளாகிறார். ஏன்?
இந்தக் கேள்வியின் மையத்திலிருந்துதான் ஓர் அரசியல் தலைவரின் தனிப்பட்ட குணாதிசயங்களுக்கும் அவருக்கு விதிக்கப்படும் கடமைகளுக்கும் சமூக இயக்கத்தின் சிக்கல்களுக்கும் உள்ள இடைவெளியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஸ்டாலினின் தனிப்பட்ட விருப்பங்கள், அவரது அடையாளங்களாக அரசியல் களத்தில் முன்வைக்கப்படும் நேர்மையாளர், பண்பாளர், நாகரிகமானவர், நிர்வாகி போன்றவை அனைத்துமே நேரிசை இயக்கத்தையும் உணர்வுகளையும் கொண்டவை. ஆனால், துரதிர்ஷ்டவசமாகத் தமிழக அரசியல் என்பது எதிரிசை உணர்வுகளால் மட்டுமே இயங்கிவந்துள்ளது. எவருடைய நேரிசை ஆற்றல்களுக்காகவும் தமிழர்கள் பெரும்பான்மை வாக்களித்ததில்லை. ஆனால், இன்னொருவர் மீதிருக்கும் எதிரிசை உணர்வுகளைத் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பாகவே தங்கள் வாக்குகளை, அரசியல் ஈடுபாடுகளைத் தமிழர்கள் கடைப்பிடிக்கும் சூழல் கடந்த 40 ஆண்டுகளில் கெட்டிப்பட்டிருக்கிறது.
இதற்கு சாதி, ஆதிக்கப் பண்பாடு, நாயக வழிபாடு, திராவிட இயக்க எழுச்சியின் உபவிளைவுகள், கருணாநிதி வெறுப்பியக்கம், அடையாள அரசியல் எனப் பல காரணங்கள் இருக்கிறது. ஆனால், ஸ்டாலின் ஆதிக்கப் பண்பாட்டு உணர்வுகளுக்கோ, நாயக வழிபாட்டுக்கோ தீனிபோடும் ஒரு ஆளுமை இல்லை. அவரது அரசியல் வளர்ச்சி – இருப்பு போன்றவை நாயக வழிபாட்டுச் சாயலோடு வளர்க்கப்பட்டிருந்தாலும், உச்சாணிக் கொம்பில் அவரை மட்டுமே நிறுத்திவைக்கும் ஒரு வழமைக்கு அவரது அரசியல் வாழ்வும் வளர்ச்சியும் இடம் கொடுக்கவில்லை. இன்னொருபுறம் தீவிரமான நவீனயுக விருப்பங்கள் ஸ்டாலினிடம் இருந்தன. அவை, நகர்சார் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்புகளின் இயக்கம் போன்றவற்றோடு தொடர்புடையவை. இவை இரண்டுக்கும் இடையிலுள்ள இடைவெளியை நிரப்ப ஸ்டாலின் செய்திருக்க வேண்டியது பொதுப்புத்தியின் உணர்வுகளுக்கு ஏற்ப தன் லட்சியங்களின் வெளிப்பாடுகளை உறுதி செய்வது. ஆனால், ஸ்டாலின் இதில் சறுக்கினார். செயல்தலைவராகப் பொறுப்பேற்ற சிறிது காலத்திலிருந்தே அவருக்கு இந்த நெருக்கடிகள் வந்தன.
(ஸ்டாலினின் விருப்பங்களுக்கும் கள யதார்த்தங்களுக்கும் உள்ள முரண்பாடுகள், முன்னோடிகளுக்கு இல்லாத சுமையை அவர் சுமக்க வேண்டிய கட்டாயம், அவருடைய ஆளுமைப் பண்பு தரும் தீர்வுகள் ஆகியவை பற்றிய அலசல் நாளை…)
கட்டுரையாளரை தொடர்புகொள்ள: writetovivekbharathi@gmail.com
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.
மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.
மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!
**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**
1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.
**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**
**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**
**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**
**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**
2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.
**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**
3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
.
**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477**�,”