_சபரிமலையில் நடந்தது என்ன? பொன்.ராதா

Published On:

| By Balaji

சபரிமலை கோயில் யுத்த களமாக மாறியுள்ளதாக, கேரளாவுக்குச் சென்று வந்த பிறகு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றிருந்த போது, இவருக்கும் பத்தினம்திட்டா காவல் துறை கண்காணிப்பாளர் யதீஷ் சந்திராவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சபரிமலையில் இருந்து திரும்பி வரும்போது, அமைச்சரிடம் போலீசார் மன்னிப்பு கோரியுள்ளனர். ’ஏற்கெனவே சபரிமலையில் பிரச்னை செய்ததாக நாங்கள் தேடும் சிலர் காரில் இருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டதால் காரை சோதனை செய்தோம்’ என்றும் போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

இந்நிலையில் சபரிமலைக்கு சென்று வந்த பிறகு, இன்று (நவம்பர் 22) கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ”சபரிமலையை யுத்த களமாக கேரள அரசு மாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐயப்பன் கோயில் வெறிச்சோடி காணப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் யாரும், மனிதாபிமான அடிப்படையில் அணுகியதாகத் தெரியவில்லை. அந்தப் பகுதிகளில் முன்பெல்லாம் ஷு அணிந்து யாரும் வரமாட்டார்கள். இப்போது அதெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. அங்கிருந்த காவல்துறையினர் மாஸ்டர் பிளான் இருப்பதாகத் தெரிவித்தனர். கோயிலின் புனிதத்தை அழிக்க மாஸ்டர் பிளான் போடப்பட்டுள்ளதாக எனக்குப் புரிகிறது” என்று கூறினார்.

முன்னதாக, சபரிமலையில் எப்போதும் சரண கோஷமும், பக்தி பாடல்களும் ஒலித்துக் கொண்டே இருக்கும். தற்போது அவ்வாறான சூழ்நிலை அங்கு இல்லை. இதுதான் கேரள அரசின் நிர்வாகமா என்று கேள்வி எழுப்பியுள்ள பொன். ராதாகிருஷ்ணன். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தீபம் காட்டியவர்கள், சரண கோஷம் போட்டவர்கள் மீதெல்லாம் வழக்குப் பதியப்படுகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், சபரிமலை கேரளாவுக்கு சொந்தமானது இல்லை. கோயிலை நிர்வகிப்பதே அரசின் வேலை என்றும் கூறினார்.

இந்நிலையில், கேரள அரசைக் கண்டித்து நாளை (நவம்பர் 23) கன்னியாகுமரி மாவட்டத்தில் போராட்டம் நடைபெறவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசு நடந்துகொள்வதை அம்மாநில உயர் நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கை என்ற பேரில் பக்தர்கள் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள்.

அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சொந்த வாகனத்தில் செல்ல போலீசார் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, அவர் பொது வாகனத்தில் தான் சென்றிருக்கிறார். அதற்கு முன்னதாக அமைச்சருக்கும், காவல் துறைக்கும் இடையே நடக்கும் விவாதங்களைப் பார்க்கும்போது அந்தக் காவல் துறை அதிகாரி எவ்வளவு மோசமாக நடந்துகொண்டுள்ளார் என்பது தெரிகிறது.

கோயிலுக்குச் செல்லும் பாஜகவினர் அரசியல் காரணத்துக்காகத்தான் கைது செய்யப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டிய தமிழிசை, கேரள பாஜக பொதுச் செயலாளர் சுரேந்திரன் இருமுடி கட்டிக் கொண்டு முறையாக சென்றும் கைது செய்யப்பட்டார் என்றார். பாஜகவினர் பக்தர்களாக இருக்கக் கூடாதா என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share